அமெரிக்க செனட்டரும் முன்னாள் முதற் பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் கடந்த வாரம் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் ஈரான் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கடந்தவாரம் ஈரான் இஸ்ரேலை தாக்கினால் அமெரிக்கா ஈரானை அழிக்குமெனத் தெரிவித்திருந்தார்.
தனது அணுநிகழ்ச்சித் திட்டம் சக்தி தேவைக்கானது மட்டுமே எனத் தெரிவித்து வரும் ஈரான், ஹிலாரியின் கருத்து கோபமூட்டக் கூடியதும் பொறுப்பற்றதுமென குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், ஐ.நா. சாசனத்தை வெளிப்படையாக மீறும் கருத்து இதுவென ஈரான் தெரிவித்துள்ளது.
ஹிலாரியின் இக்கருத்து தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக ஐ.நா. வுக்கான பிரதி ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நேர்காணலொன்றில் ஈரான் இஸ்ரேல் மீது அணுவாயுத தாக்குதலை மேற்கொண்டால் அதற்கான பதில் நடவடிக்கை என்னவாக அமையுமெனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஹிலாரி;
நான் ஜனாதிபதியாக இருந்தால் ஈரான் மீது நாம் தாக்குதலைநடத்துவோம். அது அவர்களை முற்று முழுதாக அழிக்கக் கூடியதாக இருக்குமென தெரிவித்திருந்தார்.