* அமைச்சர் அமீர்அலி கூறுகிறார்
கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் தனது தலைமைக்கு ஆபத்தாகிவிடும் என்பதாலேயே ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர்அலி தெரிவித்தார்.
மீராவோடை பிரதேச முக்கியஸ்தர்களுடனான ஒன்றுகூடல் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகிக்கும் எவருக்கும் முஸ்லிம் சமுதாயம் குறித்து அக்கறை கிடையாது. அவர்கள் தங்களது சுயலாபத்துக்காக ஐக்கிய தேசியக் கட்சியினதும் சர்வதேச சக்திகளினதும் கைப்பொம்மைகளாக மாறியிருக்கிறார்கள். கடந்த காலத்தில் இக்கட்சியின் முக்கியஸ்தர்களது நடவடிக்கைகளை அவதானித்து நோக்கியவர்களுக்கு இது தெளிவாகப்புரியும்.
தேர்தல்கள் வருவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதிகமாக விரும்புவதுண்டு. அப்போதுதான் இச்சமூகத்தை மொத்தமாக அடகு வைத்து அவர்களால் பேரம் பேசமுடியும்.
இதுவரை காலமும் இவர்களது பேரம் பேசல்களால் இந்த சமூகத்துக்கு என்ன நன்மை விளைந்திருக்கிறது. என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அப்பேரங்களின் பின்னணியில் சுயலாபங்களே முக்கியத்துவப்பட்டதாக இருக்கும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் ரவூப் ஹக்கீமோ இன்றைய அதன் தவிசாளரோ இருக்கவில்லை. அன்று கட்சியில் இருந்தவர்கள் யாவரும் புறந்தள்ளப்பட்டு விட்டார்கள். இன்று சில மொத்த வியாபாரிகளுக்கும் ஆமாம் சாமிகளுமே அதனை நடத்தி வருகிறார்கள்.
சமூகத்தை விட கட்சியின் சின்னமான மரம் முக்கியம் என்று கூறிய அடுத்த தினமே தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடகு வைத்துவிட்டார். அவரது நோக்கமெல்லாம் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் கிழக்கு மாகாணசபைக்கு வந்து விடக்கூடாது என்பதேயாகும். அப்படி வந்துவிட்டால் தனது தலைமையை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற பயம் அவருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.