* கிழக்கு நட்புறவு ஒன்றியம் அறிக்கை
நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களில் வேட்பாளர்களினால் கூறப்படும் கருத்துகள் கவனமாக எடுத்தாளப்படுவதுடன் கடந்த பல தசாப்தங்களாக கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கு எவரும் தூண்டுகோலாக இருக்கக்கூடாது என கிழக்கு நட்புறவு ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் என்பது இன்று வந்து நாளை போய்விடும். இதில் சிலருக்கு வெற்றியும் சிலருக்கு தோல்வியும் ஏற்படும். இது சகஜம். ஆனால், இனங்களுக்கிடையில் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தும் வகையில் தேர்தல் களத்தில் குதித்துள்ள கட்சிகள் விளைவுகள் தெரியாமல் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் ஒரு இனம் மற்றுமொரு இனத்திலேயே தங்கியுள்ளது. இது சரித்திரம். ஒரு இனம் இல்லாமல் மற்றைய இனம் தனித்து வாழ முடியாது. தேர்தல் காலங்களில் பேசப்படும் பேச்சுகளையும் வெளியிடப்படும் துண்டுப் பிரசுரங்களையும் அவதானமாகக் கையாளுமாறும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.