*திருகோணமலையில் ரவூப் ஹக்கீம்
ஐக்கிய தேசியக் கட்சியும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு மாகாணத்திலே நேர்மையான நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து தெளிவான உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டே தேர்தலுக்கு முகம் கொடுத்திருப்பதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருமலைமாவட்டத்தில் ஐ.தே.க.பட்டியலின் தலைமை வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
திருகோணமலை மற்றும் கிண்ணியா நகரங்களில் செவ்வாய் மாலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் சொன்னதாவது;
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானம் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொண்டு போட்டியிடுவது என்று தயாரித்த திட்டத்தைத் தவிடுபொடியாக்கி விட்டது. தமிழ் மக்களை அச்சுறுத்தி அரச பயங்கரவாதத்தை ஏற்படுத்தி அதற்கு எம்மையும் பங்குதாரர்களாக்கி தேர்தலை சந்திப்பதே அரசின் திட்டமாக இருந்தது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் போட்டியிட முடியாத களநிலைவரத்தை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதாக இருந்திருப்பின் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது பற்றி சிந்தித்திருக்கலாம்.
ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி தற்போதைய அராஜக ஆட்சியை வீழ்த்த வகுக்கப்பட்ட வியூகமாகும் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா பேசும் போது;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து இத்தேர்தலைச் சந்திப்பது அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத் தேர்தலில் பெறும் வெற்றி அனைத்து இனங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் கூட்டு முயற்சி மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் கிழக்கு மாகாண அபிவிருத்தியை நாம் முன்னெடுத்துச் செல்வோம். இதற்கு மத்திய அரசின் உதவி தேவையில்லை என்றார்.