* ஐ.தே.க. தலைவர் ரணில்
எம்.ஏ.எம்.நிலாம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மக்களின் இறைமைக்கும் பாராளுமன்றத்தின் இறையாண்மைக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நிலைமை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாதெனவும் நாட்டின் இறைமையை பாதுகாக்கும் பொருட்டு நாம் ஒன்றுபட்டு சர்வதேசம் தலையிடுவதற்காக அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
நாட்டு மக்களின் அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளும் மிக மோசமாக மறுக்கப்படும் நிலைமை அதிகரித்து வருவதாக விசனம் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க இவற்றைப் பார்த்துக் கொண்டு மக்கள் மௌனம் சாதித்தால் நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் தள்ளப்படலாமென எச்சரித்துள்ளார்.
காலம் சென்ற லலித் அத்துலத் முதலி நினைவு தினத்தையொட்டி கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் லலித் பற்றி நினைவுப் பேரூரையை நிகழ்த்துகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.
இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய விக்கிரமசிங்க தமதுரையில் தெரிவித்ததாவது;
இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் என்றுமில்லாத விதத்தில் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, அடிப்படை மனித உரிமை மீறல்கள் உட்பட சகல விடயங்களிலும் மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்கள் என்ன தான் குரலெழுப்பினாலும் அவை அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில் செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்படுகிறது.
பாராளுமன்றம் என்பது மக்களின் அரசியலதிகாரசபையாகும். அது நீதிமன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்ட ஒரு நிறுவனம் என்பதை மறந்துவிடக்கூடாது.
அரசியலமைப்பு விதிகளை மீறி அரசாங்கம் பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டு மறுத்து வருகின்றது. அரசியலமைப்புச் சபையை அமைப்பதில் வேண்டுமென்றே காலம் கடத்தப்படுகின்றது. அதேபோன்று சுயாதீன தேர்தல், பொலிஸ், பொதுச் சேவைகள் ஆணைக்குழுக்களை நியமிப்பதையும் அரசு காலத்தைக் கடத்திக் கொண்டேபோகிறது. இவற்றை உத்தரவாதப்படுத்தினால் தங்களுடைய அரசியல் திருகுதாளங்களுக்கு வாய்ப்புக்கிட்டாமல் போகும் என்பதாலேயே போலிக் காரணங்களை காட்டி அரசு காலம் கடத்துகிறது.
ஒருநாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படாவிட்டால் அந்தநாடு படிப்படியாக அழிந்து நாசமாகிப் போகும் என்பதை உலக அரசியல் வரலாற்றிலிருந்து நாம் நிறையவே பாடம் கற்றிருக்கின்றோம். இன்று இங்கு நடப்பது ஜனநாயகத்தின் போர்வையிலான சர்வாதிகார ஆட்சிமுறையொன்றாகும். இதனைச் சொல்வதற்கு நான் பயப்படவில்லை. அதிகாரம் என்பது கூர்மையான ஆயுதமாகும். அதனை சரியான பாதைக்குப் பயன்படுத்தினால் நாடு செழிப்புற்றதாக மாறும், தவறான திசையில் பயன்படுத்தினால் அழிவுகளையே சந்திக்க நேரிடும்.
எனவே அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், பாராளுமன்றத்தின் இறையாண்மை, மக்களின் இறைமை என்பவற்றை தக்க வைத்துக் கொள்வதற்குமான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தாம் ஒன்றுபட்டு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த அழுத்தத்தை தனித்து ஒரு கட்சி முன்வைப்பதைவிட ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டுச் செய்வதன் மூலம் அதனை சக்தியுள்ளதாக மாற்றியமைக்க முடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.