* நடேசன் கூறுகிறார்
விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகளை தலைவர் பிரபாகரன் உருவாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரத் தேர்வில் தோற்றி 10 பாடங்களிலும் சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் அவர் பேசியதாவது;
நீண்டகால திட்டமிடலுடன் எமது விடுதலை அமைப்பில் பல அமைப்புகளை எமது தலைவர் உருவாக்கியுள்ளார். அறிவியல்துறையில் நீண்ட திட்டமிடல்களுடன் பல விஞ்ஞானிகளை எமது தலைவர் உருவாக்கியுள்ளார். அந்த விஞ்ஞானிகள் எமது தேசத்தின் பல செயற்பாடுகளுக்கு துணையாக இருக்கின்றனர்.
இளைய தலைமுறை அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து செல்ல வேண்டுமென்பது எமது தலைவரின் விருப்பமாகும். விடுதலைப் போராட்டச் சூழலில் அனைத்து வழியிலும் எமது இளைய தலைமுறை வளர்ந்து செல்ல வேண்டுமென்பதற்காக எமது விடுதலை அமைப்பு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
போர்ச் சூழலில் மாணவர்கள் அனைத்து வழியிலும் கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கல்வி விடுதலைப் போராட்டத்திற்கு ஆதாரமாக இருக்க வேண்டுமே தவிர ஒடுக்குமுறைக்குப் பயன்படக்கூடாது.
இலங்கை அரசு தமிழினத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் அழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது. அதற்கு அமைவாகவே கல்வி உள்ளிட்ட அனைத்து வளங்களுக்கான தடைகளை ஏற்படுத்தி வருகின்றது. இன்றைய நெருக்கடியான சூழலில் மாணவர்கள் `10 ஏ' எடுப்பது என்பது இலகுவானதல்ல.
வள நெருக்கடி, ஆசிரியர்களின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மத்தியிலும் மாணவர்கள் தேர்வில் வெற்றியீட்டியிருப்பது மகிழ்வைத் தருகின்றது. மாணவர்களின் அறிவும் ஆற்றல்களும் எமது மண்ணுக்கு பயன்பட வேண்டும். வீர மரபினைக் கொண்ட தமிழினம் தனது ஆற்றல்களை அனைத்து வழியிலும் வெளிப்படுத்த வேண்டும். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு எமது விடுதலை அமைப்பு என்றும் துணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமென்றார்.
இந்நிகழ்வில் தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வே.இளங்குமரன், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ம.தேவேந்திரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முல்லைத்தீவு மகா வித்தியாலய அதிபர் அல்பிரட் ஆகியோர் வாழ்த்துரைகளை நிகழ்த்தினர். மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் பா.நடேசன் வழங்கினார்.