* தேர்தல் ஆணையாளரிடம் ஐ.தே.க.வலியுறுத்தல்
எம்.ஏ.எம்.நிலாம்
சீருடையணிந்த பொலிஸ் மற்றும் படைத் தரப்பினர் மட்டும் ஆயுதங்களைப் பாவிப்பதை உறுதிசெய்து ஏனையவர்களிடமிருந்து ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளது.
கிழக்குமாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் உச்சக் கட்டத்தையடைந்துள்ள நிலையில் பொலிஸ், படைத்தரப்பினருடன் வேறுபலரும் ஆயுதங்களுடன் நடமாடுவதாகவும் இச் செயற்பாடானது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் அச்சுறுத்துவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் சுட்டிக் காட்டியுள்ளது.
கிழக்கில் உருவாகியுள்ள அச்சச் சூழ்நிலை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்கா, டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோரடங்கிய குழு தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாகன இலக்கத்தகடு இல்லாத பல வாகனங்கள் கிழக்கில் சுற்றித்திரிவதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக்கட்சி இலக்கத்தகடற்ற வெள்ளை வான்கள் பல இவற்றில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இவற்றைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் ஆணையாளரிடம் வலியுறுத்தினர்.
இம்முறை தேர்தலின் போது வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களுக்கு அவர்கள் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாவதற்கு தேசிய அடையாள அட்டை கண்டிப்பாக இருத்தல் வேண்டும் என்ற நியதி உள்ளது. அவ்வாறு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதற்குப் பதிலீடாக அவர்களை அடையாளப்படுத்த வேறு ஏதாவது அடையாள அட்டை ஒன்றை வழங்குமாறும், தங்கள் சொந்த மாவட்டங்களைத் தவிர்த்து அகதிகளாக வெவ்வேறு மாவட்டங்களில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கான பயண வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.