* அம்பாறை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஜெமீல்
"முஸ்லிம்களின் பெரும்பான்மையைக் கிழக்கு மாகாணத்தில் குறைத்து நிருவாக அதிகாரத்தினை தன்வசப்படுத்தி எதிர்கால நில ஆக்கிரமிப்பை இலேசாக முன்னெடுப்பதற்கு அரசு திட்டமிட்டுச் செயல்பட்டுவருகின்றது. அதன் ஓர் அங்கமே கிழக்கு மாகாண சபைத் தேர்தலாகும்".
இவ்வாறு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் (யானைச் சின்னம்) வேட்பாளரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு வெளியிட்டுள்ள கொள்கை விளக்கப் பிரசுரத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் ஜெமீல் தனது கொள்கை விளக்கப் பிரசுரத்தில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
"எதிர்கால நில ஆக்கிரமிப்பை இலேசாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் இன்று கிழக்கு மாகாண அரசியல், நிருவாக உயர்பீடத்தினை அம்பாறையின் சிங்களப் பிரதேசத்திற்கு இடம்பெயரச் செய்வதற்கான திட்டத்தினை நடைபெறவிருக்கும் மாகாண சபைத்தேர்தல் மூலம் வகுத்துள்ளாக அறியவருகின்றது.
இதன் ஆரம்ப வேலைத்திட்டமாக தீகவாவியை அண்டிய பிரதேசத்தினை ஓர் பிரதேச செயலகப் பிரிவாகப் பிரகடனப்படுத்தி மாகாண அமைச்சுக்களையும், நிருவாக அலுவலகங்களையும் கொண்டுசெல்வதற்கான திட்டங்களையும் மறைமுகமாக வகுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இதன்பின் அம்பாறை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை கரையோரம் நோக்கி நகர்த்தி முஸ்லிம்களை அரசியல் அதிகார ரீதியாக செயலிழக்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கான பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் அபாயமுள்ளது.
முஸ்லிம் சமூகம் இலங்கை முழுவதிலும் பாரிய அரசியல் சவால்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், கிழக்கு மாகாண முஸ்லிம்களை திட்டமிடப்பட்ட அரசியல் சதித்திட்டங்களின் மூலம் தமது இருப்பினை இல்லாமலாக்கி, மாகாண ரீதியிலும் அரசியல் அனாதைகளாக மாற்றுவதற்கான பல்வேறு சதித்திட்டங்கள் தற்போது திரைமறைவிலும் வெளிப்படையாகவும் இடம்பெற்றுவருகின்றன.
இதன் ஓர் கட்டமாகவே முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியினையும் செல்வாக்கினையும் உடைத்தெறியும் உபாயமாகவும் அரசாங்கம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னெடுத்துள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியாகப் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் காணப்படுவது சிங்கள அரசாங்கங்களுக்குப் பாரிய சவாலாக தேசிய அரசியலில் காணப்படுவதை உணர்ந்த இன்றைய அரசாங்கம், முஸ்லிம்களின் நிலங்களை புண்ணிய பூமியாகப் பிரகடனப்படுத்தி சிங்கள மக்களைக் குடியேற்றும் உபாயத்தினை முன்னெடுத்து வருகின்றது.
இதில் முக்கியமானதொரு கட்டமாக பொத்துவில், அட்டாளைச்சேனை, ஆலிம்சேனை, தீகவாபி பிரதேசங்களில் இன்று இடம்பெற்றுவருகின்ற பலவந்த நிலப்பறிப்பினைக் குறிப்பிடலாம்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பெரும்பான்மையைக் குறைப்பதற்காக திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பிரதேசத்தினை அனுராதபுர மாவட்டத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்தோடு அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற்காணிகளை இன்னும் ஒப்படைக்காமல் இருப்பதற்கான திரைமறை காரணிகளாக பல்வேறு அம்சங்களை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கின்றது.
இந்த நிலங்களும் எதிர்காலத்தில் புண்ணிய பூமிகளாக மாற்றப்படலாமென்பதற்கானதொரு அறிகுறியாகவே இவை தென்படுகிறது.
இன்று முஸ்லிம் தலைமைகள் மத்தியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி தலைமைகளைப் பிரிக்கும் வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளதுடன், இவைபோன்ற பல்வேறு மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களை இன்றைய அரச முன்னெடுத்துச் செல்கின்றது.
அரசின் சதித்திட்டங்களை உடைத்தெறிவதற்கும் எதிர்காலத்தில் மாகாணரீதியிலான அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்குமுரிய முக்கிய நிறுவனமாக இம் மாகாணசபையும் இத்தேர்தலும் காணப்படுகிறது.
அத்துடன் இம்மாகாணத்தில் இனசௌஜன்யத்தை ஏற்படுத்துவதற்குரிய முக்கியமான தளமாக இம்மாகாணசபையை நாம் கையாளமுடியும்.