* எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை, திகாமடுல்ல, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா மூன்று உறுப்பினர்கள் வீதம் 9 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக் கொள்ளும். இவ்வாறு பெற்றுக் கொள்வதன் மூலமாக முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக்கொள்ள முடியுமென முன்னாள் பிரதியமைச்சரும் முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
புதியகாத்தான்குடி அப்றார் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அப்றார் பள்ளிவாயல் தலைவர் எம்.கலந்தர்லெவ்வை தலைமையில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ்; இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே சிங்களவர்களே முதலமைச்சர்களாக உள்ளனர். இங்கு முஸ்லிம் ஒருவரோ தமிழர் ஒருவரோ முதலமைச்சராக வரமுடியாது. அதேபோல முஸ்லிம் ஒருவர் வடமாகாணத்திலும் முதலமைச்சராக வரமுடியாது. அங்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆனால் கிழக்கில் அவ்வாறானதோர் நிலை இல்லை. இங்கு 33 வீதமாக பெரும்பான்மையாக இருந்த முஸ்லிம்கள் 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் வட - கிழக்கு இணைப்பின் ஊடாக 17 வீதமாக குறைக்கப்பட்டு சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டோம். இந்நிலையினால் 1988 இல் நடைபெற்ற வட - கிழக்கு மாகாண சபையில் இவ்வாறு சிறுபான்மையினராக காணப்பட்ட நாம் எதிர்க்கட்சியிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் கிழக்கில் பெரும்பான்மை இனமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் சிறுபான்மை இனமாக ஆக்கப்பட்டதிலிருந்து வட - கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாடு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் தலைமைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் முன்வைக்கப்பட்டு வந்தது. இங்கு வாழும் முஸ்லிம் மக்கள் ஒரு சிறுகுழுவாகவே ஐ.தே.கட்சியினாலும் நோர்வே போன்ற நாடுகளாலும் நோக்கப்பட்டு வந்தது.
அதன் காரணமாகவே ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 2002 ஆம் ஆண்டில் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்ணவு போர் நிறுத்த உடன்படிக்கையைச் செய்து கொள்ளும்போது முஸ்லிம் சமூகத்தை கணக்கில் எடுக்காது புறந்தள்ளிவிட்டு அந்த ஒப்பந்தத்தைச் செய்தார். இதனையும் செய்தது ஐக்கிய தேசியக் கட்சியே. இவ்வாறு முஸ்லிம் சமுதாயத்திற்கு செய்த துரோகத்தை முஸ்லிம் மறக்காமல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களித்து முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியுமென்று அவர் தெரிவித்தார்.