* முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் இணைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலோடு ஓரங்கட்டலாம் என்று நினைத்தவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு பெரும் சவாலாக உள்ளது.
இவ்வாறு கடந்த சனிக்கிழமை அட்டாளைச் சேனை அஸ்றப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்ட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விஷேட பேராளர் மகாநாட்டில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் தலைமையில் நடைபெற்ற மேற்படி மகாநாட்டில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேலும் அங்கு உரையாற்றுகையில்;
நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முஸ்லிம்களுடைய சுய கௌரவத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, எமது நாட்டிலுள்ள சகல இனமக்களும் கிழக்கில் ஜனநாயகத்துடன் வாழ்வதற்கான தேர்தல் ஆகும்.
எமது கட்சியில் நீண்ட நாள் போராளிகளாக இருந்த பலரை இந்த அரசாங்கம் திட்டமிட்டு கபளீகரம் செய்தது மட்டுமல்ல, இன்னும் பலரையும் தங்கள் வசம் எடுப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முஸ்லிம் காங்கிரஸில் வளர்ந்து விட்ட பலர் உடந்தையாக இருக்கின்றார்கள்.
நடைபெற இருக்கின்ற இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலை கிழக்கிற்கு வெளியிலுள்ள மக்கள் மட்டுமல்ல உலக நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக திருகோணமலை மாவட்டத்தில் பாராளுமன்றத்தில் உள்ள அதிகமான அமைச்சர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.
ஆனால், தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்களை விட திருகோணமலை மாவட்ட மக்கள் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்து என்னையும் எனது கட்சியையும் கௌரவிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தத் தேர்தல் அக்கிரமக்காரர்களுக்கும் சூழ்ச்சியாளர்களுக்கும் எதிரான தேர்தலாகும். எமது சகோதரர்கள் இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கிழக்குக்கு வெளியிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு முதுகெலும்பாக கிழக்கு மாகாணம் திகழ்கின்றது.
அம்பாறை மாவட்டம் இன்னமும் முஸ்லிம் காங்கிரஸின் தளம் என்பதில் இன்னும் உறுதியாக உள்ளது. கட்சியின் உயர்பீடத்திலுள்ளவர்களில் திருகோணமலையில் இருந்து ஒருவரும், மட்டக்களப்பில் இருந்து ஒருவரும் கட்சியை விட்டுப் போய் எதிர்க்கட்சியில் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்கள். "ஆனால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து எவரும் அப்படிச் செல்லவில்லை என்பதில் பெருமை கொள்கின்றேன்" என்றார்.