* 15 தொழிற்சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள்
யுத்தத்தை நிறுத்தி இனப்பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காணுமாறு அரசாங்கத்தையும், விடுதலைப்புலிகளையும் அரசாங்க மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச மே தினத்தையிட்டு15 அரச மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தன.
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் நேற்று நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் 3 மணியளவில் மாளிகாவத்த யுத்தத்தை நிறுத்தி இனப்பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காணுமாறு அரசாங்கத்தையும், விடுதலைப்புலிகளையும் அரசாங்க மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச மே தினத்தையிட்டு15 அரச மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தன.
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் நேற்று நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் 3 மணியளவில் மாளிகாவத்த சிறிசேன மைதானத்தை வந்தடைந்தது.
இங்கு அரச மற்றும் தனியார்துறை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சமன் ரத்னபிரிய உரையாற்றுகையில்;
யுத்தத்தை உடனடியாக நிறுத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகண்டு உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நாம் அரசாங்கத்திடமும் புலிகளிடமும் இம் மே தினத்தில் பகிரங்க வேண்டுகோள் விடுக்கிறோம்.
யுத்தமானது இலங்கையின் அனைத்து துறைகளையும் பாதிப்படையச் செய்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் கூட யுத்தம் நடைபெறும் போது ஏனைய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த முடியாதிருப்பதாக கூறினார். எனவே உடனடியாக யுத்தத்தை நிருத்துமாறு நாம் வலியுறுத்துகிறோம்.
இன்றைய மே தினத்தில் ஜே.வி.பி.க்குள் நிலவும் உள் முரண்பாடு காரணமாக ஊர்வலத்தை நடத்த முடியாமல் போயுள்ளது. ஐ.தே.க. மத வழிபாடுகளுடன் நிறுத்திக் கொண்டது. ஆளும் கட்சி தலைநகரில் ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் நடத்த முடியாது அதனை தெஹியத்தை கண்டிக்கு கொண்டு சென்றுள்ளது.
எனினும், அரச மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்களாகிய நாம் தலைநகரில் தொழிலாளர் நலனுக்காகவும் நாட்டின் விமோசனத்திற்காகவும் மேதின ஊர்வலத்தையும், பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறோம் என்றார்.
இங்கு இலங்கை ஆசிரியர்சங்கத் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் கூறுகையில்;
முதலாம்தர மாணவர் அனுமதியை உரிய முறையில் மேற்கொள்ள முடியாமலும், இலவசப் பாடநூல்களை கூட மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியாத கையாலாகாத நிலையிலும் திணறும் அரசாங்கம் சகலவற்றுக்கும் யுத்தத்தை காரணமாக கூறுகிறது.
எனவே தான் நாம் யுத்தத்தை நிறுத்துமாறு இவ்வரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். யுத்தத்தினால் ஒரு போதுமே எமது உள்நாட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாதென்பதே எமது வாதமாகும் என்றார்.
சுகாதார, சுதந்திர வர்த்தக, தபால், புகையிரத, துறைமுக, மீன்பிடி, ஆசிரியர் மற்றும் அச்சக தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 15 அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இதில் கலந்து கொண்டன.
ஊர்வலம் சென்ற பாதையிலும், பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானத்தைச் சுற்றியும் பெருமளவு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.