* அட்டன் மேதினப் பேரணியில் தொண்டமான் உறுதியளிப்பு
இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண முடியுமென்பது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுதியான நிலைப்பாடெனத் தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் விவகார அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா.என்ற குடையின் கீழ் மலையகமக்கள் அணிதிரண்டால் 3ஆண்டுகளுக்குள் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின விழா நேற்று வியாழக்கிழமை அட்டன் நகரில் கோலாகலமாக இடம்பெற்றது. காலை 11மணியளவில் ஊர்வலம் மல்லியப்பூ சந்தியிலிருந்து ஆரம்பமாகியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ்வூர்வலத்திலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டனர். மேதின ஊர்வலத்தையொட்டி அட்டன் நகரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தொண்டமான் மேலும் தெரிவித்ததாவது;
இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மீதும் என்மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றது. இன்று மலையக சமூகத்தை கூறு போட நினைக்கின்ற கூட்டமே அதிகமாகச் செயற்படுகின்றது. மலையக மக்களினுடைய தேவைகள் என்னவென்று தெரியாமல் ஒலிபெருக்கிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் மூன்று விக்கெட்டுகளில் கட்சிகளினுடைய கொடியைப் பதித்துக் கொடுக்கின்ற செயற்பாட்டையே காணமுடிகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்மக்களினுடைய நீண்ட காலத்தேவைகளை கருத்திற் கொண்டே அபிவிருத்தித் திட்டங்களை தீட்டி வருகின்றது. இன்று மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ன செய்கின்றது? எப்படிக் குறைகூறலாம் என்று சிந்திப்பதிலேயே காலத்தை செலவிடுகின்றன. அவர்களால் மலையக மக்களினுடைய தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை. மக்களின் ஒன்றுபட்ட சக்தியினுடைய வலிமை என்னவென்று உங்களுக்கே தெரிவதில்லை. நீங்கள் ஒன்றுபட்ட சக்தியாகத் திகழ்வதன் மூலம் எமது சமூகத்தினை கூறுபோடுகின்ற கூறுபோட நினைக்கின்ற சக்திகள் அனைத்தினதும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியும்.
இன்று விலைவாசி உயர்வினால் மக்கள் படுகின்ற துன்பம் எமக்கு நன்றாகத் தெரியும். அதற்கு மாற்றீட்டு நடவடிக்கை ஒன்றினை வெகு விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
விலைவாசி உயர்வு காரணமாக மீண்டும் சம்பள உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையை இம் மேதினக் கூட்டத்தில் முன்வைத்துள்ளீர்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து செயற்படும் தோட்டங்களையும் உங்களுக்கு சொந்தமாக்குவதோடு, சம்பள உயர்வினையும் பெற்றுக் கொடுக்க தயராகவுள்ளோம். அரசியல்வாதிகள் சிலர் எமது மக்களினுடைய பலவீனத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களையும் சிறிய சிறிய பொருட்களையும் கொடுக்கின்றனர். அந்த வேலையை எனக்குச் செய்ய முடியாது. எமது மக்களினுடைய வீட்டுத்தேவை, மின்சாரம், கல்வித்துறைகளை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளையே மேற்கொள்வேன் என்றார்.