அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலைச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதியொருவர் சைனைட் அருந்தி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள வீடொன்றில் வைத்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த புஸ்பா என்றழைக்கப்படும் நடராஜா ராஜி என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பெண் பொலிஸாரினால் சோதனையிடப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27 ஆம் திகதி இரவு சுகயீனமடைந்த நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் சடலம் தற்போது கொழும்பு பொலிஸ் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளையடுத்தே இவர் சைனைட் அருந்தி உயிரிழந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக அன்றைய தினம் கடமையிலிருந்த பெண் பொலிஸார், மேற்பார்வையாளர் மற்றும் முற்புறக்கூண்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவர் ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.