* `விரைவில் வடக்கையும் மீட்போம்' தெஹியத்த கண்டியவில் ஜனாதிபதி சூளுரை
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கை இன்னொரு தடவை பிரபாகரனின் கைகளுக்குள் சிக்க ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மிகக்குறுகிய காலத்துக்குள் வடக்கையும் புலிகளிடமிருந்து மீட்டு மக்களிடம் ஒப்படைப்பேன் என்று சூளுரைத்துள்ளார்.
படையினர் பெரும்பாடுபட்டு மீட்டெடுத்த கிழக்கை மீண்டும் புலிகளிடம் திருப்பிக் கொடுக்க சில சக்திகள் திட்டமிட்டு வருவதாகவும் இந்த விடயத்தில் கிழக்கு மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
தெஹியத்த கண்டியவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி கூறியதாவது;
இந்த இடத்தில் இன்று நடப்பது வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேதினக்கூட்டமாகும். கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து கிழக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமையையும், வாழும் உரிமையையும் மீளப்பெற்றுத் தருவதற்கு உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களுக்கு இன்றைய தினத்தில் தலை சாய்த்து அஞ்சலி செலுத்துகின்றோம். அன்று திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களின் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி முல்லைத்தீவுக்காட்டுக்குள் வாழும் பிரபாகரனிடம் அடிமைப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த மக்களையும் கிழக்கு மாகாணத்தையும் மீட்டெடுக்க முடிந்தமை எமது அரசாங்கம் ஈட்டிய பெரு வெற்றியாக நாம் கருதுகின்றோம்.
வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வொன்றைக்காண நாம் முயற்சித்த வேளையில், இந்த நாட்டின் தொழிலாளர் தலைவர்கள் முன்வந்து தீர்வு தேடத்தயாரான போது அனைத்தையும் உதைத்துத்தள்ளி விட்டு அப்பாவி கிழக்கு மக்களுக்கு தண்ணீரைத்தடுக்கும் விதத்தில் மாவிலாறு அணைக்கட்டை தம்வசப்படுத்த புலிகள் எடுத்த முயற்சியை எம்மால் தடுக்க முடிந்தது. அன்று மூதூர் மக்களை 24 மணி நேரத்துக்குள் விரட்டிய போது நாம் உறுதியளித்தபடி 46 நாட்களுக்குள் மீண்டும் அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்தோம்.
நாம் பாடுபட்டு மீட்டெடுத்த கிழக்கு மண்ணை மீண்டுமொருதடவை பிரபாகரனுக்குக் கொடுக்கத் தயாராகவில்லை. இந்தக் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தால் அது பிரபாகரனுக்கு அளிக்கும் வாக்குகள் என்பதை மறந்து விடாதீர்கள். அந்த வரலாற்றுத்தவறை கிழக்கு மக்கள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்குக்கிருக்கின்றது.
நாம் கிழக்கை மீட்டெடுத்தது போன்று மிக விரைவில் வடக்கையும் மீட்டெடுப்போம். ஒவ்வொரு நாளும் எமது படைவீரர்கள் வடக்கில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். கிளிநொச்சி மக்களுக்கும் விரைவில் மீட்சியைப்பெற்றுக் கொடுப்போம். அன்று வடக்கையும் கிழக்கையும் ஒன்றாகப்பார்த்தோம். இன்று வடக்கு தனியாகவும், கிழக்கு தனியாகவும் ஆகிவிட்டது. கிழக்கு மக்களுக்கு விடுதலை கிடைத்தது போன்று வடக்கு மக்களுக்கும் விடுதலை பெற்றுத் தருவோம்.
கிழக்கை மீட்டுத்தந்து விட்டோம் இனி அதனைப் பாதுகாத்துக்கொள்வது உங்களது பொறுப்பாகும். இன்று சிலர் பிரபாகரனுடன் உடன் படிக்கை செய்து கிழக்கைக் காட்டிக்கொடுக்க முனைகின்றனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.
கிழக்கில் வாழும் விவசாயிகளும், உழைக்கும் வர்க்கமும் ஒன்று பட வேண்டிய தருணம் இன்று உருவாகியுள்ளது. நீங்கள் தவறான முடிவுகளை எடுத்தால் நாம் மீண்டும் கிழக்கை இழந்து விடுவோம்.
இந்த மண்ணைத்துண்டாடுவதற்கு நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். ஒரே நாடாக கட்டியெழுப்புவதே எனது ஒரே இலட்சியமாகும். நீங்கள் என்னை நம்புங்கள். கிழக்கை மீண்டும் பிரபாகரனின் கைகளுக்குப் போகவிடாதீர்கள். பயங்கரவாதிகளிடமிருந்து எமது மண்ணை மீட்டெடுக்க எனது அரசாங்கத்தைப் பலப்படுத்துங்கள். எம்மைத் தோற்கடித்தால் முற்றுமுழுதாக தோல்வியடையப் போவது கிழக்கு மக்களான நீங்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.