* ஆசிய அமைப்பு மட்டுமே முன்வருகை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அவதானிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு பல சர்வதேச அமைப்புகள் மறுத்துள்ளன.
ஆசியாவைச் சேர்ந்த அமைப்பொன்றே இந்த அவதானிப்புப் பணிக்கு முன்வந்துள்ளது.
எனினும் ஐ.நா.பொதுநலவாய அமைப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த அவதானிப்புப் பணியில் ஈடுபட மறுப்புத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நேற்று விடுத்த அறிக்கையில்;
இப் பணிக்கென ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய அமைப்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த அவதானிப்புப் பணிகளில் ஈடுபட முடியாதுள்ளதாக இதில் மூன்று அமைப்புகள் தெரிவித்துள்ள நிலையில், ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அவதானிப்பதற்கு வருகை தரவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தல் அவதானிப்புக் கடமைகளுக்காக இந்த அமைப்பு எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் இத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் உள்ளூர் கண்காணிப்பாளர்களையும் எதிர்வரும் 6ஆம் திகதி சந்தித்து தமது தேர்தல் அவதானிப்புப் பணிகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 8ஆம் திகதி திருகோணமலை, மட்டக்களப்பு, மற்றும் அம்பாறைக்கு இந்த அமைப்பு விஜயம் செய்யவிருப்பதுடன், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கவனத்திற் கொள்ளல், தேர்தல் தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குகளை எண்ணும் பணிகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்திய நிலைமைகள் குறித்தும் ஆராயவுள்ளது.
இறுதியாக அனைத்துத் தேர்தல் அவதானிப்புப் பணிகளும் நிறைவு பெற்றதும் அது தொடர்பான அறிக்கையை இந்த அமைப்புத் தயாரிக்கும்.
மேற்படி அமைப்பின் அவதானிப்புப் பணி தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் 12ஆம் திகதியன்று தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்படுமென எதிர் பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.