* இந்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை
தமிழகத்தில் கருணா குழுவினர் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக மத்திய உளவுப்பிரிவு பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தமிழகத்திலிருந்து வெளியாகும் `தினத்தந்தி' பத்திரிகை தெரிவித்துள்ளது.
அப்பத்திரிகை மேலும் கூறுகையில்;
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்குமிடையே கடும்போர் நடந்து வருகிறது. விடுதலைப் புலிகள் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த போரில் தினமும் பலர் மடிகிறார்கள்.
பொதுவாக இலங்கையில் போர் பெரியளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிகளவில் வருவது வழக்கம்.
அகதிகள் அதிகளவில் வரும்போது அவர்களோடு சேர்ந்து விடுதலைப் புலிகளும் ஊடுருவ வாய்ப்புக்களுண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடலில் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்குள் வரும் இலங்கை தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய உளவுப் பிரிவு பொலிஸார் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக பொலிஸாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அந்தத் தகவலில்,
இலங்கையிலிருந்து கருணாகுழுவினர் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும் அவ்வாறு ஊடுருவும் கருணா குழுவினர் தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்புள்ளது.
விடுதலைப் புலிகள் மீது இந்தப் பழியை போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களது கவனத்தை திசை திருப்ப இந்தச் சதிச் செயலை அரங்கேற்றலாம் என்று எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைத் தகவலையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு நேர ரோந்துப் பணியில் பொலிஸார் விழிப்போடிருக்க வேண்டும். வாகனச் சோதனை தீவிரமாயிருக்க வேண்டும். லொட்ஜ்களில் சோதனை கடுமையாக இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.