கிழக்கு மாகாண சபைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதன்மூலம் விடுதலைப் புலிகளை உளவியல் ரீதியாக வெற்றிகொள்ளலாமென இலங்கை அரசு கருதுவதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்று வியாழக் கிழமை தெரிவித்தது.
மே 10 இல் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இம்மாவட்டங்களின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அரசியல்வாதிகள் குண்டு துளைக்காத கூடுகளுக்குள் நின்றுகொண்டு உரையாற்றுவதையும் அவதானிக்கமுடிகிறது. இதுவரை பாரிய சம்பவம் இடம்பெறவில்லை. பிரசாரங்கள் ஒப்பீட்டளவில் அமைதியாகவே இடம்பெற்று வருகின்றன என்று தேர்தலுடன் தொடர்புடைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐ.தே.க.வும் அதன் நேச அணியான முஸ்லிம் காங்கிரஸும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போதாதென குற்றம் சாட்டியுள்ளன.
ஐ.தே.க.- மு.கா. கூட்டணி உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் நாம் கோரியிருக்கிறோம் என்று ஐ.தே.க. எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஆயுதங்களுடன் காணப்படுவதாகவும் இதனை அனுமதிக்கக் கூடாதெனவும் ஜயலத் தெரிவித்தார்.
சீருடையணிந்த படையினர் மட்டுமே ஆயுதங்களுடனிருக்க அனுமதிக்கப்பட வேண்டு மெனவும் வலியுறுத்தியிருக்கும் ஜயலத், பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பில் மட்டும் ஐ.தே.க. தங்கியிருக்கவில்லையெனவும் பொதுமக்களின் பாதுகாப்பையும் தாங்கள் கொண்டிருப்பதாகவும் பிரசாரத்தின் போது ஆபத்தான நிலைமை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.