-எம்.ஏ.எம்.நிலாம்-
சர்வதேச தொழிலாளர் தினத்தை உலகின் பாட்டாளிவர்க்கத்தினர் உணர்வு பூர்வமாகக் கொண்டாடிய நிலையில், இலங்கையில் வைபவங்கள் களையிழந்த நிலையிலேயே இடம்பெற்றன.
பிரதான அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் தலைநகர் கொழும்புக்கு வெளியே நடைபெற்ற அதேசமயம், கொழும்பில் சிறியளவிலேயே 7 கூட்டங்கள் இடம்பெற்றன. அதிலும் ஜே.வி.பி.யினதும் கம்யூனிஸ்ட், சமசமாஜ கட்சிகளின் கூட்டினதும் கூட்டத்திலேயே கணிசமான மக்கள் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.
நாட்டில் முதற்றடவையாக 11 மேதினக்கூட்டங்களே நடைபெற்றன. இவற்றில் 7 கூட்டங்கள் தலைநகரிலும் 4 கூட்டங்கள் கொழும்புக்கு வெளியேயும் இடம்பெற்றன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் தெஹியத்த கண்டிய மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இதில் பங்கேற்றார். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மேதினக் கூட்டத்தை நடத்தவில்லை. பதிலாக களனி ரஜமகா விகாரையில் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியது. இந்த சமய நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்களும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டமும் ஊர்வலமும் அட்டன் பஸ்நிலையத்துக்கருகில் இடம் பெற்றது. இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் இ.தொ.கா. தலைவர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் இதில் உரையாற்றினர். ஊர்வலம் அட்டன் மல்லிகைப்பூ சந்தியிலிருந்து அட்டன் பஸ் நிலையத்தைச் சென்றடைந்தது.
மலையக மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலமும் கூட்டமும் அதன் தலைவர் அமைச்சர் பெ.சந்திரசேகரன் தலைமையில் பண்டாரவளை நகரில் இடம்பெற்றது.
ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தின ஊர்வலமும் கூட்டமும் மேலக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தலைமையில் பொகவந்தலாவை நகரில் நடைபெற்றது.
இவை தவிர தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டம் தலவாக்கலையிலும் மலையகத்தின் ஏனைய தொழிற்சங்கங்கள் மலையகத்தில் ஊர்வலங்களையும் கூட்டங்களையும் சமய வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தின.
தலைநகர் கொழும்பில் 7 மே தினக் கூட்டங்கள் நடைபெற்ற போதும் இரண்டு ஊர்வலங்கள் மட்டுமே பெரிய அளவில் நடத்தப்பட்டன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி, இலங்கை மக்கள் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி ஆகிய 5 கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இணைந்து கிருலப்பனை மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடத்தின. அதன் ஊர்வலம் நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்திலிருந்து சென்றது.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் யோசனையை அரசு உடனடியாக நாட்டுக்கு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்திக் கோஷமெழுப்பினர். அத்துடன் விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டுமெனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இன்றைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பான சுலோக அட்டைகளைத்தாங்கிய வண்ணம் தொழிலாளர்கள் ஊர்வலத்தில் சென்றனர்.
கடந்த காலத்தில் மிகச் சிறப்பான மேதின ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்திய ஜே.வி.பி.இம்முறை எந்த விதமான ஊர்வலத்தையும் நடத்தாமல் கொழும்பு மாநகரசபை மைதானத்தில் கூட்டத்தை மட்டுமே நடத்தியது. நாட்டின் பாதுகாப்பு நிலை கருதியே ஊர்வலத்தை நடத்தவில்லை என அக்கட்சி தெரிவித்தது.
பாலாதம்போ தலைமையிலான வர்த்தக ஊழியர் சங்கமும் இடதுசாரி முன்னணியும் சுதந்திர ஊடக அமைப்பும் வங்கி ஊழியர்கள் சங்கமும் இணைந்து ஹைட்பார்க்கில் மேதினக் கூட்டத்தை நடத்தியது. இதன் ஊர்வலம் கொள்ளுப்பிட்டி வர்த்தக ஊழியர் சங்கத்தலைமையகத்திலிருந்து புறப்பட்டு கொம்பனித்தெரு யூனியன் பிளேஸ் வழியாக ஹைட்பார்க்கை வந்தடைந்தது.
இதில் வர்த்தக ஊழியர் சங்கத்தலைவர்களுடன், இடது சாரி முன்னணியின் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, வீனஸ் ஜயதிலக்க, சமில் ஜயநெத்தி, ஊடக அமைப்புகள் சார்பில் சுனந்த தேசப்பிரிய, போத்தல ஜயந்த உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
இவை தவிர கொழும்பில் இயங்கும் பல்வேறு தொழிற்சங்கங்களும் தமது மே தினக் கூட்டங்களை கொழும்பிலுள்ள மண்டபங்களில் நடத்தின.
கிருலப்பனை, ஹைட்பார்க் கூட்டங்களிலும் கொழும்பு மாநகர சபைத் திடலில் ஜே.வி.பி. நடத்திய கூட்டத்திலும் கணிசமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
14 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான தொழிற்சங்க சம்மேளனத்தின் மே தினக் கூட்டம் மாளிகாவத்தை பீ.டீ.சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மிகக்குறைவான தொழிலாளர்களே கலந்து கொண்டதைக் காண முடிந்தது.
கொழும்பில் நேற்று பெரிய அளவில் பாதுகாப்பு நடவடிக்கை காணப்படவில்லை. ஊர்வலங்களும் கூட்டங்களும் நடைபெற்ற வீதிகளிலும் பகுதிகளிலும் மட்டும் கணிசமான பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
மே தினக்கூட்டங்கள், ஊர்வலங்கள் இடம் பெற்ற பகுதிகள் தவிர்ந்த தலைநகரின் ஏனைய பிரதேசங்கள் நேற்றைய தினம் வெறிச்சோடிப்போய் இருந்ததையே காணக்கூடியதாக இருந்தது.
அனைத்துக் கூட்டங்களும் மாலை 6 மணியாகும் போது முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.