* சர்வதேச, ஐ.பி.எல். வாய்ப்புமில்லை
சர்ச்சைக்குரிய சொய்ப் அக்தரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அநேகமாக முடிவுக்கு வருகிறது. தடையை எதிர்த்து இவர் தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆண்டுகள் தடை நீடிக்குமென இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் `புயல்வேக' பந்துவீச்சாளர் அக்தர். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (பி.சி.பி.) கொள்கையை விமர்சித்தது, சகவீரர் ஆசிப்பை துடுப்பால் தொடையில் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து, இவருக்கு பி.சி.பி., 5 ஆண்டுகள் தடை விதித்தது. ஐ.பி.எல்., `ருவென்ரி-20' தொடரிலும் பங்கேற்க முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் தடையை எதிர்த்து அக்தர் மேன்முறையீடு செய்தார். இதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அப்தாப் பரூக் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் போது வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டார்.
இந்தச் சூழலில் விசாரணைக்குழு நேற்று முன்தினம் தனது இடைக்கால தீர்ப்பை அறிவித்தது. இறுதிக் கட்ட விசாரணை, எதிர்வரும் ஜூன் மாதம் நடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நீதிபதி அப்தார் பரூக் கூறுகையில்;
"அக்தர் தன்னை திருத்திக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. விதிமுறைகளை மீறி தொடர்ந்து ஒழுக்கமின்றி நடந்துகொண்டார். இதனால் தடை நீடிக்கப்படுகிறது. ஒழுங்கு உத்தரவுப்படி பாகிஸ்தானில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது. ஐ.பி.எல்., அமைப்பில் விளையாட தடை விதிக்கப்படவில்லை. அக்தர் மன்னிப்பு கேட்டு அறிக்கை சமர்ப்பித்ததைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.
தற்போது இடைக்கால உத்தரவு தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு ஜூன் மாதத்தில் வழங்கப்படும்" என்றார்.
ஐந்தாண்டுத் தடை விதிக்கப்பட்டாலும் அக்தர் கிரிக்கெட்டில் சம்பாதிப்பதை தடுக்க பி.சி.பி., விரும்பவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. பி.சி.பி., சட்ட ஆலோசகர் டபாசுல் கூறுகையில், "பாகிஸ்தான் தவிர எங்கு வேண்டுமானாலும் அவர் விளையாடி சம்பாதிக்கலாம். தடை பாகிஸ்தானுக்குள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்", என்றார்.