ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய, நியூஸிலாந்து வீரர்கள் நாடு திரும்பியுள்ளதால் பல அணிகளுக்கு பாதிப்பேற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தோல்வியையே சந்திக்காமல் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்துள்ள சென்னை சுப்ப கிங்ஸ் அணி, தனது அடுத்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இதுவரை சென்னை அணிக்காக ஆடிய அவுஸ்திரேலியாவின் மத்யூஹைடன், மைக் ஹஸி மற்றும் நியூஸிலாந்தின் ஓரம் ஆகியோர் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக தாயகம் திரும்பிவிட்டார்கள்.
இதனால் எஞ்சிய போட்டிகளில் அவர்கள் விளையாட மாட்டார்கள். ஹைடன் இல்லாததால் தொடக்க ஆட்டக்காரராக வித்யூத் சிவராமகிருஷ்ணனை ஆட வைக்க சுப்ப கிங்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் வித்யூத் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில்,
`ஹைடன், ஹஸி மிகச்சிறந்த வீரர்கள். அவர்களது இடத்தை நிரப்புவது கடினம். அவர்களுடன் இணைந்து விளையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களிடமிருந்து நாங்கள் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டோம்.
அணியின் தொடக்க ஆட்டக்காரராக மட்டுமன்றி எந்த வரிசையில் விளையாடவும் தயாராக இருக்கும்படி பயிற்சியாளர் வெசல்ஸ் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.