Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
மக்கள் ஆதரவு சரியும் நிலையில் ஜே.வி.பி.க்குள் குத்துவெட்டுக்கள்
[03 - May - 2008] [Font Size - A - A - A]
-கே.ரத்நாயகா-

( நேற்றைய தொடர்ச்சி)

ஜே.வி.பி. தலைவர்கள்

ஜே.வி.பி. தலைமைத்துவத்தில் உள்ள வீரவன்சவின் எதிரிகள் சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போனவர்களாவர். அதேசமயம், கட்சி அரசாங்கத்துடன் இணைந்தால் கட்சிக்கு எஞ்சியுள்ள ஆதரவும் ஆவியாகிவிடும் என்பதையிட்டு அவர்கள் பெரும் கவலையில் உள்ளனர். கட்சியில் அரசியல் வழியைப் பின்பற்றத் தவறியமைக்காகவும் ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்பாக மிகவும் விமர்சனப் போக்கைக் கடைப்பிடிக்கத் தவறியமைக்காகவும் வீரவன்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஏப்ரல் 9 ஆம் திகதி பத்திரிகையாளர் மாநாட்டில், வீரவன்ச அரசாங்கத்தை விமர்சிக்கத் தவறிய ஒரு தொகை விவகாரங்களை பட்டியலிட்டார். இவற்றில், 2007 ஜூன் மாதம் பொலிஸார் கொழும்பில் இருந்து நூற்றுக் கணக்கான தமிழர்களை பலாத்காரமாக வெளியேற்றியது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் சண்டே லீடர் பத்திரிகையை வெளியிடும் லீடர் அச்சகத்திற்கு தீ வைத்ததும் அடங்கும்.

ஏப்ரல் 20 ஆம் திகதி வெளியான ஜே.வி.பி. வெளியிடும் லங்கா பத்திரிகையில் வெளியான பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் பேட்டியில், வீரவன்ச "கட்சியை மகிந்த ராஜபக்ஷவோடு கட்டிப்போட" முயற்சித்ததாக குற்றஞ்சாட்டினார். அரசாங்கம் "கட்சியை அதன் பைக்குள் போட்டுக் கொள்ள விரும்புகிறது... அவர்கள் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விமலை (வீரவன்ச) பயன்படுத்தி வந்துள்ளனர்... அவர்கள் தோல்வி கண்டதை அடுத்து அவர்கள் அவரைவெளியே எடுத்துவிட்டுள்ளனர் என நாம் சந்தேகிக்கின்றோம்" என அவர் தெரிவித்தார்.

வீரவன்சவைப் போலவே ஜே.வி.பி.யும் யுத்தத்திற்கு ஆதரவளிப்பதில் உறுதியாக உள்ளது. "நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. தேசியப் பிரச்சினை எல்லாவற்றுக்கும் முதலானது. இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி மேற்கத்தைய சூழ்ச்சிகளும் இந்திய தலையீடும் இடம்பெறுகின்றன. இலங்கையை கொசோவோ ஆக்குவதற்கான சதி நடைபெறுகின்றது. நாட்டில் பொருளாதார நெருக்கடி உண்டு... ராஜபக்ஷ அரசாங்கத்திடம் இந்தப் பிரச்சினைகளுககு தீர்வு கிடையாது. இதற்கு (நாட்டுக்கு) தேசப்பற்றுள்ளவர்களதும் முற்போக்கானவர்களதும் புதிய தேசப்பற்று முன்னணி ஒன்று அவசியமாகும்" என சில்வா லங்கா பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

சில காலமாகவே புகைந்துகொண்டிருந்த இந்த முரண்பாடுகள் இப்போது அம்பலத்திற்கு வந்தது தற்செயலானது அல்ல. ரொக்கட் வேகத்தில் அதிகரிக்கும் பணவீக்கமானது கிராமப்புறங்களில் ஜே.வி.பி.யின் நீண்டகால ஆதரவுத் தளம் உட்பட பரந்த மக்கள் மத்தியில் அதிருப்தியை எரியச் செய்துள்ளது என்பதைப் பற்றி ஜே.வி.பி.தலைவர்கள் அதிகம் முன்னுணர்வு கொண்டுள்ளனர். உணவுப் பொருட்களுக்கான ஆண்டு பணவீக்க வீதம் மார்ச் மாதத்தில் தாங்க முடியாத 37 வீதத்தை எட்டியுள்ளது. நாட்டின் முக்கிய உணவுப் பொருளான அரிசி உட்பட உணவுப் பொருட்கள் பற்றாக்குறையில் இது பிரதிபலித்துள்ளது.

கடந்த ஆண்டு கிழக்கில் புலிகளுக்கு எதிராக சில துரித வெற்றிகளைப் பெற்ற பின்னர், வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் சேற்றில் புதைந்து போயுள்ளன. இராணுவத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் நாட்டின் பெரும்பகுதியான சிங்கள மக்கள் வாழும் தெற்கில் உள்ள வறிய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர். ஜே.வி.பி.யின் மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் யுத்த முயற்சிக்கு அர்ப்பணிக்குமாறு அழைப்புவிடுகின்ற நிலையில், பல்கலைக்கழக மாணவர்களும் அரசாங்கத்துறை ஊழியர்களும் நிதிவெட்டு மற்றும் சம்பள மட்டம் மேலும் மேலும் சரிந்து வருவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், ஜே.வி.பி. தனது பலத்தை காட்சிப்படுத்துவதற்காக வழக்கமாக பயன்படுத்தி வரும் மேதின ஊர்வலத்தை இந்த ஆண்டு நடத்தாமல் இருக்க முடிவு செய்துள்ளது.

ஜே.வி.பி. கொழும்பு மற்றும் சர்வதேச ஊடகங்களில் "மார்க்சிஸ்டுகளாக" காட்டிக்கொண்ட போதிலும், அந்தக் கட்சிக்கும் மார்க்சிசத்திற்கும் அல்லது சோசலிசத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அது எப்பொழுதும் வறிய, கிராமப்புற இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளதே அன்றி தொழிலாளர் வர்க்கத்தை அல்ல. 1960 களில் அது ஸ்தாபிக்கப்பட்டது. முதல் ஜே.வி.பி.யின் கொள்கை மாவோவாதம், குவேராவாதம் மற்றும் சிங்கள இனவாத அரசியலின் கலவையை அடிப்படையாகக் கொண்டதாகும். சிங்கள இனவாத அரசியலானது நாட்டின் உள்நாட்டு யுத்தத்தின் தாக்கத்தின் கீழ் துரிதமாக வலதுசாரி பக்கம் திரும்பியுள்ளது.

1980 களின் பிற்பகுதியில், இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக "தேசப்பக்தி" பிரசாரம் ஒன்றை முன்னெடுத்த ஜே.வி.பி., வடக்கில் புலிகளை நசுக்கி சமாதான உடன்படிக்கை ஒன்றைத் திணிப்பதற்காக இந்திய "அமைதிப்படையை" அனுமதிக்க உடன்பட்டதன் மூலம் யூ.என்.பி. அரசாங்கம் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியது. ஜே.வி.பி.யின் இனவாத எதிர்ப்பை ஆதரிக்க மறுத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை பாசிச ஜே.வி.பி. கும்பல் கொன்று தள்ளியது. 1989 இல் ஜே.வி.பி.யுடன் கூட்டணி ஒன்றை அமைக்கும் பாதையில் அடியெடுத்து வைத்திருந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச, கட்சிக்கு எதிராகத் திரும்பியதோடு, அதன் தலைவர்களை படுகொலை செய்ததுடன் நாட்டின் தென்பகுதி பூராவும் கொலைப் படைகளை கட்டவிழ்த்துவிட்டார். இதன்போது பத்தாயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஜே.வி.பி.மீண்டும் அரசியல் நீரோட்டத்திற்குள் வந்தது. யூ.என்.பி., குமாரதுங்கவின் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஷ்ரீ.ல.சு.க.) ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் எதிராக எதிர்ப்பு வளர்ச்சி கண்ட அளவில், ஜே.வி.பி. ஆளும் கும்பலுக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு குழாயாக பெறுமதியான பாத்திரத்தை இட்டு நிரப்பியது. எவ்வாறெனினும், அது 2004 இல் ஷ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு வறியவர்களுக்கு உதவுவதாக கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றத் தவறிய நிலையில் ஜே.வி.பி. யின் ஆதரவு வீழ்ச்சி காணத் தொடங்கியது.

வெகுஜன ஆதரவு சரிந்து கொண்டிருந்த நிலைமையின் கீழ், 2004 டிசம்பரில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட சர்வதேச நிதி உதவியை கையளிப்பதற்காக புலிகளுடன் கூட்டமைப்பொன்றை குமாரதுங்க அரசாங்கம் ஸ்தாபித்ததை கசப்புடன் எதிர்த்த ஜே.வி.பி., 2005 நடுப்பகுதியில் அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொண்டது. நிதி உதவி கூட்டமைப்புக்கு எதிரான அதன் கண்டனமானது, புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் பேரில் இனவாத உணர்வைத் கிளறிவிடும் பிரசாரத்துக்கு சமிக்ஞையாக விளங்கியது. தமக்குள்ள ஆதரவு பற்றி நிச்சயமில்லாமல் இருந்த ஜே.பி.வி. 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தவில்லை. மாறாக அது குமாரதுங்கவிற்கு பதிலாக ஷ்ரீ.ல.சு.க.தலைவராகிய ராஜபக்ஷவிற்கு யுத்தத்திற்கான பாதையை அமைக்கும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தது.

தொடர்ந்து சரிந்துவரும் ஜே.வி.பி.உறுப்பினர்கள் எண்ணிக்கையும் வெகுஜன ஆதரவும் இப்போது அதன் சொந்த உறுப்பினர்களுக்குள் நெருக்கடியை தூண்டிவிட்டுள்ளதுடன் ஒரு பிளவை நோக்கியும் தள்ளியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கண்டியில் கருத்துத்தெரிவித்த வீரவன்ச, "கட்சிக்குள் ஓட்டுப்போடும் சாத்தியம் மிகத் தொலைவில் உள்ளதாக" சுட்டிக்காட்டினார்.

உலக சோசலிச இணையத்தளம்

Email this page Your Opinion Print this page
சிறையில் அடைக்கப்படும் ஊடகங்கள்
இலங்கையின் இனப்பிரச்சினையை வைத்து ஆதிக்கப்போட்டியில் குதித்துள்ள அமெரிக்கா, இந்தியா
மக்கள் ஆதரவு சரியும் நிலையில் ஜே.வி.பி.க்குள் குத்துவெட்டுக்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com