ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் சமத்துவமின்மை கடுமையாக அதிகரித்துவருகின்றது என்று ஆசிய அபிவிருத்தி வங்கி அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருக்கிறது. ஆசியா பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சியைக் கண்டுவருவதாகவும் சீனா, இந்தியா போன்ற பெரிய ஆசிய நாடுகளின் துரித பொருளாதார வளர்ச்சி இந்த நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக மாற்றியமைக்கப் போகிறது என்றும் பெரிதாகப் பேசப்பட்டு வருகின்ற நிலைமையில் இந்தக் கண்டம் பூராகவும் அதிகரித்து வருகின்ற சமத்துவமின்மை குறித்த இந்த அறிக்கையும் வெளியாகியிருக்கிறது.
நன்கு கல்வி கற்ற பிரிவினருக்குச் சாதகமாகவும் தேர்ச்சித் திறமை குறைந்த பிரிவினருக்குப் பாதகமாகவும் உலகமயமாக்கல் அமைந்திருப்பதன் விளைவாகவே சமத்துவமின்மை அதிகரித்து வருகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆசியாவின் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் தனவந்தர்கள் மிக விரைவாக மேலும் தனவந்தர்களாக வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைத் தரங்களில் அதிகரித்து வருகின்ற ஏற்றத்தாழ்வு பொருளாதார வளர்ச்சிச் செயன்முறைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. வறுமை வீதங்களில் வீழ்ச்சி காணப்படுகின்ற போதிலும்கூட, பிராந்தியத்தின் துரித அபிவிருத்தியில் வறியவர்கள் மேலும் பின்தள்ளப்பட்டுக் கொண்டே போகிறார்கள். ஆசியப் பிராந்தியத்தின் அபிவிருத்தியைப் பொறுத்த வரை சமத்துவமின்மை முனைப்பாகத் தெரிகிற ஒரு அம்சமாக இருக்கிறது. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் கூடுதலான காலமாக நேபாளம், சீனா, கம்போடியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் சமத்துவமின்மையில் கடுமையான அதிகரிப்பு காணப்படுகிறது என்று ஆசிய அபிவிருத்தி வங்கி அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
வறியவர்களின் வாழ்க்கை நிலைமைகளில் மேம்பாடு ஏற்படுகின்ற வேகத்தை விட மிகவும் விரைவாகத் தனவந்தர்கள் மேலும் தனவந்தர்களாகிக் கொண்டு போகும் இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கு அரசாங்கங்கள் அவற்றின் கொள்கைகளில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று விதந்துரைத்திருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையில் அதன் கண்டுபிடிப்புகளை உலக பொருளாதாரத்தில் அல்லது சந்தைப் பொருளாதார சீர்திருத்தங்களில் ஒன்றிணைவதிலிருந்து ஆசியா பின்வாங்க வேண்டுமென்று கோரப்படுவதாக அர்த்தப்படுத்தலாகாது என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளினால் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்ற அல்லது சர்வதேச நிதி நிறுவனங்களினால் அந்த நாடுகள் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற நவதாராள பொருளாதாரக் கொள்கைகள் சனத்தொகையில் அதிகப் பெரும்பான்மையானவர்களின் வாழ்க்கைத் தரங்களைப் படுமோசமாகப் பின்தள்ளியிருக்கின்றன என்று நீண்டகாலமாகவே குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. திறந்த சந்தைக் கொள்கைகளும் பொருளாதாரத்தின் சகல முக்கிய துறைகளின் தனியார் மயமாக்கலும் துளிர் விட்டு வந்த உள்ளூர்க் கைத்தொழில் மற்றும் விவசாயத்துறைகளுக்கான உதவிகள் குறைக்கப்பட்டமையும் வறியவர்களை மேலும் வறியவர்களாகவும் தனவந்தர்களை மேலும் தனவந்தர்களாகவும் வருவதற்கு உதவியிருக்கின்றது. இந்த நிலைப்பாட்டை உறுதி செய்வதாகவே ஆசிய சமத்துவமின்மை அதிகரிப்புப் பற்றிய கணிப்பீடு அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
திறந்த சந்தைப் பொருளாதாரத்தினதும் உலகமயமாக்கலினதும் விளைவே இந்தச் சமத்துவமின்மை அதிகரிப்பு என்று ஆசிய அபிவிருத்தி வங்கி கூறுகின்ற போதிலும், உலக மயமாக்கலைத் தொடர்ந்து நியாயப்படுத்தும் நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. வங்கியின் இந்த நிலைப்பாடு ஆசிய நாடுகள் எதிர் நோக்கியிருக்கின்ற சமத்துவமின்மை அதிகரிப்பு நெருக்கடியைத் தணிப்பதற்கு உதவப் போவதில்லை. உலகமயமாக்கலின் பலன்களை மிகவும் சொற்ப எண்ணிக்கையானோரே அனுபவிக்கின்ற அதேவேளை, உலகின் அதிகப் பெரும்பான்மையான மக்களுக்கு உலகமயமாக்கலின் திசையைத் தீர்மானிப்பதில் எந்தப் பங்குமே இல்லை. அவர்களின் குரல் கேட்கப்படுவதுமில்லை. உலகமயமாக்கலின் பலாபலன்கள், நன்மைகள் அசமத்துவமான முறையிலேயே நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கும் தோல்வி காண்பவர்களுக்கும் இடையேயான துருவமயமாதல் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. வாங்கும் சக்தியுள்ளவனே வாழத் தகுதியுள்ளவன் என்பதே இன்றைய உலகமயமாக்கலின் கீழான வாழ்க்கைத் தாரகமந்திரமாகி விட்ட துரதிர்ஷ்டத்தைக் காண்கிறோம்.