பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், அனைத்து பிரெஞ்சுத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மேதின பேரணியில் 7000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் எழுச்சிபூர்வமாக கலந்து கொண்டனர்.
சர்வதேச தொழிலாளர் தினமான வியாழக்கிழமை, ஏனைய பிரெஞ்சு தொழிற்கட்சிகள், சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து, பிரெஞ்சுத் தமிழர்களால் நடாத்தப்பட்ட இப் பேரணி பிற்பகல் 2 மணிக்கு, பாரிஸின் குடியரசு சதுக்கத்திலிருந்து ஆரம்பமாகியது. தமிழர் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் அணிவகுப்புடன், விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தைத் தாங்கிய ஊர்தி முன் செல்ல பிரபாகரனின் நிழற்படம், தமிழீழத் தேசியக்கொடி, இலங்கை அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் பதாதைகளையும் தாங்கியவாறு அனைவரும் பின் சென்றனர்.
இலங்கை அரசபடைகளால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும், இனப்படுகொலைகளை வெளிப்படுத்தும் சித்திரிப்பு ஊர்திகள் முன்செல்ல தமிழ் வாத்தியக் கருவிகளை இசைத்தவாறும், காவடி ஆடியவாறும் ஏனையவர்கள் பின் தொடர்ந்தனர்.
இந்நிகழ்வில், பெருந்திரளான இளையோர் கலந்துகொண்டு, தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை வெளிப்படுத்தும் கோஷங்களை உரக்க ஒலித்ததுடன், ஒருங்கிணைப்புக் குழுவின் மக்கள் தொடர்பாடல் அணியினர், ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
தமிழரின் பாரம்பரிய கலைவடிவம் ஊடாகவும், போரட்டத்தின் நியாயத்தன்மையை எடுத்துச் செல்லலாம் என்பதற்கு, இந்த அணிவகுப்பு ஓர் எடுத்துக்காட்டாகவும், முன்னுதாரணமாகவும் இருந்தது, இக் கலைவடிவத்தால் ஈர்க்கப்பட்ட பிரெஞ்சு மக்கள், தாமாக முன்வந்து, தமிழ் மக்களின் இன்னல் நிலையினைக் கேட்டறிந்து கொண்டனர்.
மாலை 6 மணிக்கு, பேரணி பாரிஸின் தேசிய சதுக்கத்தை வந்தடைந்தது. அங்கு, லாக்குர்நோவ் நகரசபை உறுப்பினர் அந்தோணி ரூசல் உரைநிகழ்த்தும் போது.
எதிர்வரும் ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளப் போவதாகவும், அப்போது, தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்டு, பிரான்ஸ் விடுதலைப்புலிகள் மீதான தடையினை விலக்க வேண்டுமென்றும், அதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, பிரான்ஸ் தமிழ்ச் சங்ககங்களின் கூட்டமைப்பு இணைப்பாளர் பாலசுந்தரம், லாக்குர்நோர்வ் நகரசபை உறுப்பினர் புவனேந்திரன், ஈழநாடு ஆசிரியர் பாலச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மாலை 6.30 மணிக்கு, "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற பாடலை அனைவரும் பாடி உறுதி எடுத்துக் கொண்ட பின்னர், நிகழ்வு நிறைவுற்றது.
ஐரோப்பிய நாடுகளின், புலம்பெயர் தமிழ் மக்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட தொழிலாளர் பேரணியை, குழப்புவதற்கு பல பொய்ப்பிரசாரங்களை, சிங்கள பேரினவாத அரசு தமது ஊடகங்கள் மூலம் செய்திருந்தும், இந்நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.