ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் ,எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுரைக்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன மட்டக்களப்பில் தங்கியிருந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பிரதேச மக்கள் மிக அமைதியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பெரும் ஒத்துழைப்பையும் நல்குவதாக ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி யுத்தத்திற்கு அரசியல் தீர்வே சரியான தீர்வென்று நம்புவதாகவும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தமிழ் மக்கள் பயம், பீதியின்றி வாழ்வதற்கான உரிமையை ஏற்படுத்துவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
அத்துடன் அநீதியற்ற முறையான முகாமைத்துவத்துடனும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சாதாரண வாழ்க்கைச் செலவுடனும் மக்கள் வாழ்வதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி என்றும் செயலாற்றி வருகின்றது. யுத்தமற்ற சமாதானமான பசி, பிணியற்ற நாட்டு மக்களின் வளமான வாழ்வே ரணில் விக்கிரமசிங்கவின் ஒரேயொரு குறிக்கோளும், எதிர்பார்ப்புமாகும் என்றும் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.