மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மாகாண சபை தொடர்பான நடவடிக்கைகளில் சில பொலிஸ் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக பிரதி பொலிஸ்மா அதிபரிடம் ஐக்கியதேசியக் கட்சி, தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி, மாகாண சபைத்தேர்தலில் மட்டு. மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் தேர்தல் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடலை பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.எம்.டி.ஹேரத் மேற்கொண்டபோதே மேற்படிவிடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஈழவர் ஜனநாயகமுன்னணி, தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, சுயேச்சை குழுக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஜெயலத் ஜெயவர்த்தன, எமது கட்சி உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தாக்கப்படுவதாகவும், வாழைச்சேனை பொலிஸார் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழ் ஜனநாயக கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் இரா-துரைரத்தினம், வாழைச்சேனை, காத்தான்குடி பொலிஸ் அதிகாரிகள் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதாகவும் காத்தான்குடியில் செய்த ஒன்பது முறைப்பாடுகள் இற்றைவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லையென்றும், அரசின் செயற்பாடுகளுக்கும் ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதற்காகவுமே போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் ஒருதலைப்பட்சமாக செயற்படுவது வேதனையைத் தருவதுடன் தாளங்குடா, தர்மபுரம், மஜிமூர், புன்னைச்சோலை கைக்குண்டு வீச்சு சம்பவங்கள் இற்றைவரை விசாரணைக்கு எடுக்கப்படாதது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிப்பதாகவும் உடனடியாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் இரா-துரைரத்தினம் கேட்டுக்கொண்டார்.
பதிலளித்து பேசிய பிரதி பொலிஸ் மா அதிபர் ஹேரத், பொலிஸார் எக்கட்சிக்கும் சார்பானவர்கள் அல்லர். அவர்கள் நடுநிலையாக நின்று சட்டத்தையும், ஒழுங்கையும், அமைதியையும் நிலைநாட்டவே பாடுபடுகின்றனர். இங்கு குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி எவ்விதபாரபட்சமுமின்றி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.