* திகாமடுல்ல வேட்பாளர் எம். அப்துல் மஜீட்
இனப்பிரச்சினையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் ஒரு வரப்பிரசாதமாக அமையப் போகின்றது. இவ்வாறு அட்டாளைச் சேனையில் நடைபெற்ற ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். அப்துல் மஜீட் தெரிவித்தார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்;
கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தேசமாகும். இது உரிமைக்கும் சலுகைக்கும் இடையில் நடைபெறப் போகின்ற தேர்தலாகும். எமக்கு சலுகை வேண்டுமா? உரிமை வேண்டுமா? என்பதனை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு கிழக்கு மாகாண மக்கள் கையிலேயே உள்ளது. சலுகைக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்க வந்தவர்கள் வாக்களித்தால் இந்த நாட்டில் உரிமைகள் எதுவுமற்ற விலாசம் தெரியாத அடிமைச் சமூகமாகவே முஸ்லிம்கள் மாற்றப்படுவார்கள்.
மாகாண சபைதானே என்று விளையாட்டாக கருதக் கூடாது. சகல அதிகாரங்களையும் கொண்ட ஒரு மாநில அரசாங்கமே மாகாணசபை. இதன் மூலம் எமது பிரதேசத்தில் தேவையான அபிவிருத்திகளை செய்ய முடியும். கடந்த25 வருடங்களுக்கு மேலாக எந்தவித அபிவிருத்தியும் இல்லாமல் தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர் நோக்கும் கஷ்டங்களைப் போக்கி பொதுமக்களின் நன்மைகளை மட்டுமே குறிக்கோளாக வைத்து திட்டங்களை மாகாண சபை மூலம் முன்னெடுத்துச் செல்லலாம்.
கிடைக்கின்ற சலுகைகளுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. இதன் மூலம் எனது பிரதேச மக்களுக்கு எதையாவது செய்து கொடுப்போம் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். பொலிஸ் துறையின் உயர் பதவியில் இருந்த போது எனது பிரதேச மக்களுக்கு எந்தளவு சேவையாற்றியுள்ளேன் என்பதை மக்கள் அறிவார்கள். நான் மரணிக்கும் வரை ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் தான் அங்கத்தவராக இருப்பேன் எனத் தெரிவித்தார்.