* சுயேச்சைக்குழு -9 தலைவர் .எஸ்.எம்.இப்ஹாம்
பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தத்திற்கும் அம்பாறை மாவட்டத்தில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அக்குழுவின் தலைவரான எம்.எஸ்.எம்.இப்ஹாம் அறிவித்துள்ளார்.
சமூகத்தை காட்டிக்கொடுக்கும் வகையில் மனச்சாட்சிக்கு விரோதமாக ஆயுதக் குழுவொன்றுடன் தேர்தல் உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டிய தேவை எமக்குக் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேற்படி சுயேச்சைக் குழுத் தலைவர் இப்ஹாம் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது;
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தைக் கருத்திற்கொண்டு சுயாதீனமாகப் போட்டியிடும் நோக்கில் சமூக சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்து அம்பாறை மாவட்டத்தில் சுயேச்சை அணியொன்றை ஏற்படுத்தினோம்.
இந்த அணியில் தேசிய முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் சுதந்திர முன்னணி என்பனவும் அங்கம் வகிக்கின்றன. பொது வேலைத் திட்டமொன்றின் அடிப்படையில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய எமது சுயேச்சைக் குழு, இத்தேர்தலை எத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்டபோதிலும் அவற்றுக்கு அடிபணிந்து, - சோரம் போகாமல் இறுதிவரை சுயாதீனமாக எதிர்கொள்வது என்ற ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன் பிள்ளையான் குழுவினருடன் முஸ்லிம் சுதந்திர முன்னணி ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கப்பல் சின்னத்திலும் மட்டக்களப்பில் அன்னாசி சின்னத்திலும் திருமலை மாவட்டத்தில் கரண்டி சின்னத்திலும் போட்டியிடும் சுயேச்சைக் குழுக்கள், இத்தேர்தலில் பிள்ளையான் அணியினரை ஆதரிப்பது என்ற இணக்கப்பாட்டின் பிரகாரமே அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
ஆனால், அம்பாறை மாவட்டத்தில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் எமது சுயேச்சைக் குழுவுக்கும் அந்த ஒப்பந்தத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துக்கொள்கின்றோம்.
எமது சுயேச்சைக் குழுவின் பெயரைப் பயன்படுத்தி ஆயுதக் குழுவொன்றுடன் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்துடன் எமக்கு உடன்பாடு கிடையாது என்பதோடு அதனை நாம் வன்மையாக ஆட்சேபிக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.