கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 221 ஜெலிக்நைற் குச்சிகளை கண்டு பிடித்தனர்.
கல்பிட்டி கடற்படை முகாம் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புத்தளம், கொழும்பு பிரதான வீதியில் பாலாவியில் வைத்து இந்த வானை கடற்படையினர் சோதனையிட்டபோது இவை பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டது.
கொழும்பில் இருந்து இந்த வான் புத்தளம் நோக்கிச் சென்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த வானில் பயணம் செய்த ஒரு முஸ்லிம் பெண் உட்பட இரு முஸ்லிம்கள், இரு சிங்களவர்களும், ஜெலிக்நைற் குச்சிகளும் புத்தளம் பொலிஸாரிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதமும் கல்பிட்டியில் இருந்து மன்னாருக்கு கடத்தப்படவிருந்த ஒரு தொகை ஜெலிக்நைற் குச்சிகளையும், அதற்குரியவர்களையும் கல்பிட்டி பொலிஸார் கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.