* யாழ்.அரச அதிபர் கே.கணேஷ்
யாழ்.மாவட்டத்தில் போர்ச்சூழல்களினால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ள துறைகளில் கூட்டுறவுத்துறையும் ஒன்று. கூட்டுறவுத்துறையை கட்டி வளர்க்கும் பொறுப்பு இப்பிரதேச மக்களையே சார்ந்ததாகும். கூட்டுறவுத்துறை மூலம் நன்மைகளைப் பெறுபவர்கள் அந்தந்தப் பிரதேச மக்கள்தான், கூட்டுறவாளர்கள் தமக்குரிய பொறுப்பை உணர்ந்து மக்களுக்கு சகல பொருட்களையும் நியாய விலையில் வழங்கி அவர்களது வாழ்வில் பொருளாதார சுமையில் இருந்து விடுபட சேவைகளை திறம்பட வழங்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் நயினாதீவு, புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கம் புங்குடுதீவில் திறந்துள்ள கோப்சிற்றி விற்பனை நிலையத்தின் விற்பனையை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை காலை சங்கத்தின் தலைவர் வைத்தியகலாநிதி க.இராஜரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் யாழ் .மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் தொடர்ந்து உரையாற்றுகையில்;
நெருக்கடியான காலங்களில் யாழ். மாவட்ட மக்களுக்கு கூட்டுறவுத்துறையினரே உணவுப் பொருட்களை வழங்கிவந்தனர். இன்றைக்கும் நிவாரணங்கள் அனைத்தும் நலிவுற்ற மக்களுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலமே வழங்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில் கூட்டுறவுத்துறையை மக்களுக்கு சேவையை வழங்கும், மக்களால் கட்டி வளர்க்கப்படும் துறையாக நாம் கட்டிவளர்ப்போமானால் அதன் நன்மை மக்களுக்கே கிடைக்கும். கூட்டுறவுத்துறையை வளப்படுத்துவதற்கு வள பங்கீடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஒரு காலத்தில் யாழ். மாவட்டத்தின் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சி எல்லோராலும் பாராட்டப்பட்டது.அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த மக்களின் பங்களிப்பு அவசியம். அதற்காக எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்றார்.
நிகழ்வில் தலைமைதாங்கிய சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி க.இராஜரெட்ணம் உரையாற்றுகையில்; புங்குடுதீவு மக்களின் மேம்பாட்டுக்காக இங்கு நாம் கோப்சிற்றி பல்பொருள் விற்பனை நிலையத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம். இப்பிரதேசத்தின் அடிப்படைவசதிகள் மேம்படாது இருப்பதால் மக்கள் குடித்தொகை மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. இருப்பினும் இப்பகுதியில் வாழும் மக்களின் நலன்கருதி கோப்சிற்றி மூலம் சகல பொருட்களையும் ஒரே இடத்தில் பெற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இன்று இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விற்பனையை ஆரம்பித்து வைத்துள்ள யாழ்.மாவட்ட அசாங்க அதிபர் இப்பிரதேச மக்களின் நலன்களில் அதிக அக்கறை கொண்டு பலசேவைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவர் ஓர் நல்ல நிர்வாகியாக வளங்களை சமமாக பங்கீடு செய்து புங்குடுதீவு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்குவது உட்பட அளப்பரிய வசதிகளை செய்து கொடுத்துள்ளார். அதற்காக இம்மக்கள் சார்பில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
நிகழ்வில் யாழ்.மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பெ.சிவலிங்கம், செ.கனகசபாபதி, வேலணைப் பிரதேச செயலர் மு.நந்தகோபாலன், உட்பட யாழ்.மாவட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சிப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.