* அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயகக் சக்திகளையும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எமது இலக்கு நோக்கிய பயணத்தில் நடந்து வந்த பாதையில் எமது மக்கள் மாற்றங்களைச் சந்திப்பதற்கு மாறாக ஏமாற்றங்களை மட்டுமே இதுவரை சந்தித்திருக்கின்றார்கள். இதற்கான காரணம் எமது மக்களின் வாழ்வியல், மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகக் கிடைத்த சந்தர்ப்பங்கள் யாவும் அவ்வப்போது தமிழ் தலைமைத்துவங்களினால் சரிவரப் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதே பிரதானமாகும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண சபைக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுத்து அதை எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கில் நகர்த்திச் செல்வதே நடைமுறைச் சாத்தியமான வழிமுறையாகும்.
இதுகுறித்து ஈ.பி.டி.பி. யினராகிய நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவும், மற்றும் சர்வதேச சமூகத்தினரும் விரும்பி நிற்கும் நிலையில், இந்த வழிமுறைக்கூடாகவே தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரும்பி ஏற்று நம்பிக்கையோடு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்து வருகின்றார்.
இந்த முயற்சியின் பயனாகவே இன்றைய அரசியல் யதார்த்த சூழலுக்கு ஏற்றவாறு கிழக்கில் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது. இதேநேரத்தில் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உகந்த பூரணமான சூழல் இல்லை என்ற காரணத்தை வைத்து வடக்கு மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்கான தீர்வு முயற்சிகளை பின்தள்ளுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது.
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் பின்னர் கிழக்கு மக்கள் அனுபவிக்கப் போகும் வாழ்வியல் உரிமைகளை வடக்கு மக்களும் சம காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும்.
அந்த வகையில் வடக்கு மக்களுக்கான சிறப்பு நிர்வாகக் குழு ஒன்றை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சரவை பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரமும் பெறப்பட்டிருக்கின்றது. வடக்கு மக்களுக்கான சிறப்பு நிர்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்திருப்பதோடு, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ஷ ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கவும் ஏற்பாடாகியிருக்கின்றது.
வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளிடம் அது கையளிக்கப்படும் வரை வடக்கு மக்களுக்கான சிறப்பு நிர்வாகக் குழு எமது மக்களை நிர்வகித்து சேவையாற்றும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு , வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வாழும் மக்களின் அவலங்களுக்குத் தீர்வு கண்டு எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் சிறப்புடன் செயற்படும்.
எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு, சுகாதாரம் , கல்வி , போக்குவரத்து , குடிநீர் , மின்சாரம் , நீர்ப்பாசனம், தொலைத்தொடர்பு , பெருந்தெருக்கள் மற்றும் உட்கட்டமைப்பு, மீன்பிடி, விவசாயம் , கால்நடை, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, மற்றும் சமூக பொருளாதார, கலாசார மேம்பாடு என அனைத்து வாழ்வியல் உரிமைகளுக்காகவும் மகிந்த சிந்தனையின் திட்டத்தின் அடிப்படையில் வடக்கு மக்களுக்கான சிறப்பு நிர்வாகக் குழு செயலாற்றவுள்ளது.
கிழக்கில் தேர்தல் மூலமும், வடக்கில் தேர்தல் நடத்தப்படும் வரை வடக்கு மக்கள் சிறப்பு நிர்வாகக் குழு மூலமும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வியல் உரிமைகளைப் பெற்றிடவும் அரசியல் உரிமை நோக்கி விரையவும் கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை நாம் சவால்களை எதிர்கொண்டு சரிவரப் பயன்படுத்தியே தீர வேண்டும்.
எமது மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் நடைமுறைச் சாத்தியமான இவ்வழிமுறையில் இணைந்து எமது மக்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளினதும் வரலாற்றுக் கடமையாகும்.
சகோதர ஜனநாயகக் கட்சிகள், சக மாற்றுக் கருத்துடையவர்கள், புத்திஜீவிகள், மனித நேய அமைப்புகள், மதத் தலைவர்கள், புலம்பெயர்ந்து வாழும்ஜனநாயக சக்திகள் என அனைத்துத் தரப்பினரதும் வரலாற்றுப் பங்களிப்பை எதிர்பார்த்து அவலப்படுகின்ற எமது மக்களின் சார்பாக நேசமுடன் அழைப்பு விடுக்கின்றோம்.