* செயலாளர் ரில்வின் சில்வா
ரொஷான் நாகலிங்கம்
புதிய கட்சியை விமல் வீரவன்ச ஆரம்பிப்பது குறித்து எமக்கு எந்த சிக்கலுமில்லை என ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்ததுடன் பத்திரிகை மகாநாடு நடத்தி காலக்கெடு விதிப்பதைத் தவிர்த்து எம்முடன் அவர் தொடர்பு கொண்டு எப்போதும் பேச்சுவார்த்தை நடத்த முடியுமெனக் கூறினார்.
இலங்கை மன்ற கல்லூரியில் ஜே.வி.பி. புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது;
தற்போது அரசு 13 ஆவது அரசியலமைப்பை விடுத்து சமஷ்டி குறித்து பேசுகின்றது. முதலில் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த 17 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் அரசியல் பேரவையை உருவாக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்.
இந்தப் பேரவையை உருவாக்காததன் காரணமாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்க முடியாதுள்ளது. கிழக்குத் தேர்தலில் அமைச்சர்கள் அரச நிறுவனங்களின் வாகனங்களையும் கட்டிடங்களையும் பாவிக்கின்றனர். சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்குமாயின் இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருக்காது. அரசாங்கம் தமது இலாப நோக்கிலேயே இதனை மேற்கொள்ளாதுள்ளது. தெகியத்த கண்டியவில் விபத்து தொடர்பில் யாவருக்கும் தெரியுமென்ற வகையில் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தெரியவந்துள்ளது.
எமது கட்சியிலிருந்து சென்ற விமல் வீரவன்ச புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்து எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. கட்சியை விட்டு அவர் விலகாத நிலையில் கட்சியாப்பின் பிரகாரம் புதிய கட்சியை நிறுவ முடியாது.
அவர் சென்றதால் எமது கட்சிக்கு எந்த இழப்புமில்லை. அவர் எவரையும் கூட்டணி அழைத்து முன்னணியமைக்கும் முன்னர் கட்சியிலிருந்து விலகுமாறே நாம் கேட்கின்றோம்.
இன்னும் கட்சி உறுப்பினராகவுள்ள அவர் எம்முடன் தொடர்புகொண்டு எமது பெலவத்தையிலுள்ள தலைமையகத்தில் எப்போதும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள முடியும்.
நாம் அவருடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளதன் காரணமாக தொடர்புகொள்ள முடியவில்லை. அவருக்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ளதனால் எமது தொலைபேசி இலக்கங்கள் மாற்றப்படாத நிலையில் எப்போதும் தொடர்பு கொண்டு கட்சியின் தலைமையகமுள்ள பெலவத்தையில் பேச்சுவார்த்தையை அவர் மேற்கொள்ள முடியும்.
எனவே, பத்திரிகையாளர் மகாநாட்டை நடத்தி கட்சிக்கு காலக்கெடு விதிப்பதைத் தவிர்த்து பேச்சுக்கு வருமாறு அழைக்கின்றோம் என்றார்.