* முகமாலையில் புலிகளின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறார்
றோவின் முன்னாள் அதிகாரி முகமாலைச் சமரில் விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்கது என்று இந்தியப் புலனாய்வு அமைப்பான `றோ' வின் முன்னாள் அதிகாரி பி. இராமன் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய ஆய்வுகளுக்கான இணையத்தளத்தில் பி. இராமன் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு,
விடுதலைப் புலிகளின் பொறியில் இரண்டாவது முறையாக இலங்கைப் படையினர் சிக்கிக் கொண்டுள்ளனர். கடந்த 23 ஆம் நாள் முகமாலையில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் காரணமாக 150 படையினர் கொல்லப்பட்டதுடன், பாரியளவு ஆயுதங்களை விடுதலைப் புலிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் நாள் இதே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வுகளின் காரணமாக இலங்கை படைத்தரப்பு பாரிய இழப்புகளைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு முகமாலைத் தாக்குதல்களின் போது 139 படையினர் கொல்லப்பட்டனர். முதலில் இந்தத் தகவல்களை இலங்கை அரசாங்கத் தரப்பு நிராகரித்த போதிலும் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
2006 ஆம் ஆண்டு முகமாலைத் தாக்குதல்களின் போது 400 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் நாள் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து 43 படையினர் கொல்லப்பட்டதாகவும், 33 படையினரைக் காணவில்லை எனவும் இலங்கை இராணுவம் தகவல் வெளியிட்டிருந்தது. எனினும், சி.என்.என். செய்திச் சேவை மற்றும் ஏ.எஃப்.பி. ஆகிய செய்தி நிறுவனங்கள் 100க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியிட்டிருந்தன.
இலங்கைப் பாதுகாப்புத் தரப்பு மதிப்பீட்டின்படி 150 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3,000 விடுதலைப் புலி உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும், இதுவரையில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் எண்ணிக்கையே 3, 105 எனவும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாளாந்தம் ஏதாவது ஒரு இடத்தில் படை நடவடிக்கை அல்லது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்பு என்ற தகவல்களே பாதுகாப்புத் தரப்பின் செய்தியின் உட்கிடக்கையாக வெளிப்பட்டு வருகின்றது. இந்தத் தகவல்களின் மூலம் படையினர் மற்றும் சிங்கள மக்களின் மனோவலிமையை அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்தது.
படைத்தரப்பின் இத்தகைய செயற்பாடுகளின் மூலம் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பல வீனப்படுத்தப்படுவார்கள் எனவும் அரசாங்கம் கருதியது. புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் படைத்தளங்கள் மற்றும் முக்கிய கட்டடங்கள் மீது வெற்றிகரமாக வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் கடற்படை அழிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றி இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் எனவும் கூறப்படுகின்றது. தமது சொந்த மண்ணின் மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்குவது போர்த் தந்திரோபாயமாகவோ அல்லது பயங்கரவாத ஒழிப்புநடவடிக்கையாகவோ அமையாது.
மாறாக இந்த நிலைமை சொந்தப் படையினர் மற்றும் மக்கள் மத்தியில் தேவையற்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். தமக்கு பொய்யான தகவல்களை வழங்கியே போர்க் களத்திற்கு அனுப்பப்பட்டதாக படையினர் உணர்ந்தால் அது அரசியல் வாதிகளுக்கும் உயர் படைத் தளபதிகளுக்கும் பாரிய எதிர்விளைவுகளை உண்டுபண்ணும்.
விடுதலைப்புலிகளும், தமிழ் ஆதரவாளர்களும் வட போர்முனையின் போர்க்கள நிலைவரங்களை நன்கு உணர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
எனவே இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அவர்களை எந்த வகையிலும் பாதிக்காது என்பதனை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மையில் இந்தப் பிழையான தகவல்களின் மூலம் படையினரும் சிங்கள மக்களுமே ஏமாற்றப்படுகின்றனர். 2006 ஆம் ஆண்டிலும் இன்றும் அதே நிலைமையே நீடிக்கின்றது.
2006 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்களோ அதனையே மீண்டும் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி புலிகள் மேற்கொண்டனர். ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு தப்பியோடுவதனைப் போன்று பாசாங்கு செய்து, படையினரை குறித்த பிரதேசத்திற்குள் நுழையச் செய்து பின்னர் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். இந்தத் திடீர் தாக்குதல் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் படையினர் மீது சரமாரியான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
இந்த வெற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் போராளிகளுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது. இந்தப் போர் வெற்றி வட களமுனையில் விடுதலைப் புலிகள் பலம் பொருந்தியவர்கள் என்பதனை மீண்டும் பறை சாற்றி நிற்கின்றது. 23 ஆம் திகதி அடைந்த போர் வெற்றி ஓரளவு திருப்தி அளிக்கக்கூடிய போதிலும், அதனை ஒரு திருப்திகரமான நிலையாகக் கருத முடியாது.
போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்களவு உயர்நிலையில் காணப்படுகின்றமை மறுக்கப்பட முடியாத உண்மை. வட போர் முனையை இலகுவாக தரை வழியாகக் கடப்பது என்பது ஒரு பகல் கனவாகவே தென்படுகின்றது . வான் தாக்குதல்களின் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தால் மாத்திரமே முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியும்.
ஒரு புறத்தில் இலங்கை விமானப் படை பிரபாகரனை இலக்கு வைத்து பல தாக்குதல்களை மேற்கொள்கிறது. மறுபுறத்தில் விமானப் படையின் வானூர்திகளைச் சுட்டுவீழ்த்த புலிகள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் எதுவுமே இதுவரையில் சாத்தியப்படவில்லை.
இந்த முயற்சியில் யார் வெற்றி பெறுகின்றார்களோ அவர்கள் போரில் முன்னணி வகிக்கக் கூடிய நிலை ஏற்படும் என்று பி. இராமன் எழுதியுள்ளார்.