ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச கூறுகிறார் நாட்டைப் பாதுகாப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும் புதிய தேசிய முன்னணியை அமைத்து அரசமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதனை முன்னெடுப்பதற்கான முழுத் தகுதியும் ஜே.வி.பி.கேயுள்ளது. எனவே இதற்குத் தேவையான சக்தியை வழங்க அனைவரையும் ஒன்றுபடுமாறு அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை தொடர்பில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாட்டை மாற்ற வேண்டுமெனத் தெரிவித்த அவர் அதனை செய்யாவிட்டால் தமது கட்சி மாற்றத்தை ஏற்படுத்துமெனவும் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை கொழும்பு மாநகர சபை மைதானத்தில் ஜே.வி.பி.நடத்திய மேதின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
இந்த மே தினத்தில் ஜே.வி.பி.ஊர்வலம் நடத்த வில்லை. அதற்கு அக்கட்சி சரிவைச் சந்தித்துள்ளதே காரணமென சில அரசியல் வாதிகளும் ஊடகவியலாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நாம் ஏன் இம்முறை இதனை நடத்த வில்லையென்றால் நாட்டின் பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்குமாக நாளைமுதல் ஒன்றுக்கு பதிலாக 18 ஊர்வலங்களை நடத்தவுள்ளதேயாகும்.
அதேநேரம் எமது கட்சி உறுப்பினர்கள் ஒஸ்ரேலியா, இத்தாலி, லண்டன், கனடா ஆகிய நாடுகளில் மே தின ஊர்வலங்களை நடத்தியுள்ளனர்.
இம்முறை நான் நீலம், பச்சைக் கொடிகளைக் காணவில்லை. ஐ.தே.க.ஆலய வழிபாட்டிலும் பொதுஜன ஐக்கிய முன்னணி தமது தேர்தல் பிரசாரத்துக்காக கிழக்கிலும் மே தினத்தை நடத்துகின்றது.
குறிக்கோளுடன் செயற்படும் எமது கட்சியே மே தினத்தின் தார்ப்பரியத்தை உணர்ந்து அதனை நடத்தியது! கடந்த வருடம் நாமே தனித்து ஊர்வலம் நடத்தினோம். 42 வருடமாக இதனை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த மே தினத்தில் எம்முடன் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய 17 அமைப்பின் ஜோன் பெனட் தனது உரையில் தொழிலாளர்களையும் நாட்டையும் நீண்டகாலம் பாதுகாக்கும் கட்சியெனக் குறிப்பிட்டுள்ளார். அவருக்குத் தெரிந்திருக்கின்ற நிலையில் எமது மக்களுக்கு தெரியாமலுள்ளது.
எமது கட்சி காற்றுக்கு ஏற்றவாறு சரிகின்ற கட்சியல்ல. நிலையான இமயமலையைப் போன்ற கட்சியாகும். 1990 க்குப் பின் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கட்சியாகும்.
தற்போது நாடு பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் போன்ற முக்கிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. இதனை எதிர்கொள்ள ஐ.தே.கட்சியோ அல்லது பொதுஜன ஐக்கிய முன்னணியோ தயாரான நிலையில் இல்லை. இவற்றுக்கு எமது கட்சியால் மட்டுமே தீர்வைப்பெற்றுக் கொடுக்கமுடியும்.
எமது நாட்டுக்கு காலனித்துவ ஆட்சியினை புதிய வடிவத்தில் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் கொண்டு வருவதற்கான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளன. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஒன்றரை, இரண்டரை வருடமாக கூடிக் கலந்துரையாடி தேவையற்ற யோசனையையே முன்வைத்தது. இதனை நாம் எதிர்த்தோம்.
தற்போது அக்குழுவின் பிரதிநிதிகள் வட அயர்லாந்துக்குச் சென்று சமஷ்டி குறித்து ஐஸ்ஸில் விழுந்து விழுந்து ஆராய்ந்து ஒரு யோசனையை கொண்டு வந்துள்ளனர்.
எமது நாட்டிலிருந்து அயர்லாந்து பிரச்சினை வேறுபட்டது. அங்கு பிரச்சினை தீர்ந்து விட்டதாகக் கூறுகின்றனர். அது சுத்தப் பொய். பிரித்தானியா அயர்லாந்தைக் கைப்பற்றி வைத்துள்ளது. வட அயர்லாந்தை விடுவிக்குமுகமாகவே ஐரிஷ் விடுதலை இராணுவம் போராடியது.
இங்கு பயங்கரவாதிகள் நாட்டைப் பிரிக்க முற்பட்டுள்ளனர். முதலில் இந்தியா 13 ஆவது அரசியலமைப்பு யோசனையை முன்வைத்தது.
கிழக்கு தமிழ் மக்கள் தமக்கு இந்தியா விடுதலையையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுக்குமென நினைக்கின்றனர். அது போல நாட்டிலுள்ள சில தமிழ் மக்களும் நம்புகின்றனர்.
கிழக்கை படையினர் தமது உயிரைப் பணயம் வைத்தும் மக்கள் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு என்பற்றுக்கு முகம் கொடுத்தும் அங்கு வாழ்ந்த மூவின மக்களின் இடத்தை மீட்டுக் கொடுத்தனர். இப்போது கிழக்கு யாரிடம் போயுள்ளது.
சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக அதனை இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது போல் திருமலை எண்ணெய்க் குதங்கள் உட்பட பல ஹெக்டேயர் நிலமும் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை ஜே.வி.பி.எதிர்க்கின்றது. அம் மக்களுக்கான வளங்களை அம்மக்களே அனுபவிக்க வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும்.
இந்த அனல் நிலையத்தால் அம்மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படப் போவதில்லை. இந்தியா முற்றுமுழுதான இலாபம் ஈட்டுவதை நோக்கமாகவே கொண்டு அங்கு அதனை நிறுவுகின்றது. இதனைத்தான் எதிர்க்கின்றோம். ஆகக் குறைந்தது இரு நாடுகளுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் 50 க்கு 50 என்ற இலாபம் பகிரப்பட வேண்டும்.
நாம் எதிர்ப்பதன் காரணமாகவே தமது ஏஜன்டான பிள்ளையானுக்கு கிழக்கைக் கொடுப்பதற்கு 13 ஆவது அரசியலமைப்பு யோசனையை இந்தியா கொண்டு வந்தது.
எமது நாட்டில் பெரியண்னை மாதிரி கைநுழைப்பதற்கு இந்தியாவை நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.
நாம் எக்கட்சிக்கும் எத்தரப்புக்கும் விரோதமானவர்கள் அல்ல. அவர்களது நிலைப்பாட்டை மாற்றுமாறே கோருகின்றோம். அதாவது இலங்கை தொடர்பில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றுமாறே கோருகின்றோம். அவ்வாறில்லையெனில் நாம் அதனை மாற்றுவோம்.
நாட்டைப் பாதுகாக்கும் முகமாக றோகன விஜேவீர சகோதரால் ஆரம்பிக்கப்பட்டு அவருக்கு பின்வந்தவர்களால் கட்டிக்காக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியா எமது வளங்களை சூறையாட விட மாட்டோம். சம்பூரில் இல்மனைட் உளள நிலையில் வேறு எங்கு என்னென்ன வளங்கள் உள்ளதென்பது தெரியாதுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஐ.நா.வில் ஒரு வாக்கேயுள்ள நிலையில் இப்பிராந்தியத்தின் பெரிய அண்ணை விளையாட்டுக்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை.
இந்தியா தலையிடுமாயின் போராட்டங்களை முன்னெடுப்போம். இலங்கைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு பொறுப்பாக நோர்வே நியமித்துள்ள சமாதானத் தூதுவர் ஜோன் ஹான்ஸ்சன் இதில் இந்தியா தலையிட வேண்டுமெனக் கோரியுள்ளார். இவர்கள் திரும்பவும் பழைய வட்டத்துக்குள் வருகின்றனர்.
இதனைத் தடுத்து நிறுத்தும் சக்தி எமக்கேயுள்ளது. இன்று ஐ.தே.க.வீதிக்கு இறங்கி ஊர்வலம் நடத்துவதற்கு இயலாத நிலையிலுள்ளது. அக் கட்சி விலைவாசி உயர்வு என பலவற்றை கூறுகின்றதே தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாதுள்ளது.
எமது கட்சியால் மட்டுமே நாட்டைப் பாதுகாப்பதற்கு வீதிக்கு இறங்கி போராட்டத்தை நடத்தக் கூடிய பலமுள்ளது.
தற்போது மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்கு புதிய தேசிய முன்னணி அரசை கொண்டு வருவதற்கான தேவை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான புகையிரத என்ஜின் மாதிரி ஜே.வி.பி. உள்ளது.
பின் இதற்கான பெட்டிகளை அமைத்து போராட்டத்தை கொண்டு நடத்துவதற்கு எம்மிடம் சோஷலிச விவசாய சங்கம் உட்பட பல சங்கங்கள் உள்ள நிலையில் இதனை மேலும் வழிநடத்தி செல்வதற்கு அனைத்துத் தரப்பினரது ஒத்துழைப்பும் தேவையாகும்.
2005-2006 காலப்பகுதியில் எமது உறுப்பினர்கள் அமைச்சுப் பதவி வகித்த போது என்ன நடந்தது எனக் கூறவிரும்புகின்றேன்.
அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராகவிருக்கும் போது அரிசியை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியதுடன், விவசாய உற்பத்தியை ஊக்குவித்து அதன் விலைகளைக் குறைத்தார். அவர் இன்று அமைச்சராகவிருந்தாலும் அரிசிக்கு இந்தளவு விலை உயர்வு ஏற்பட்டிருக்காது.
அது போல் நாம் பொறுப்பேற்ற அமைச்சுக்களின் வீண்விரயத்தை தடுத்தோம். இப்போது கலாசார அமைச்சு என்ன செய்கின்றது. ஒன்றுமில்லை எமது கட்சியே கலாசாரத்தை பாதுகாத்து வருகின்றது.
நாம் எமது செயலை மக்களுக்கு காட்டியுள்ளதால் மக்கள் எம்மீது பற்று வைத்துள்ளனர். இதனால் எமது கட்சியை எவராலும் உடைத்தெறிய முடியாது.
தற்போதைய நிலையில் இன்று நாம் புதிய தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலையிலுள்ளோம். அதாவது நாட்டை பாதுகாத்து கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே புதிய முன்னணியமைத்து, புதிய அரசை அமைத்து அடுத்த மேதினத்தில் பச்சை, நீலக் கொடிகள் பறக்காதவாறு அனைத்துத் தரப்பினரும் எம்முடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வருமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.
இக்கூட்டத்தில் அக்கட்சியின் செயலாளர் ரில்வின்சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், அவுஸ்திரேலிய ஒக்டோபர் 17 அமைப்பின் ஜொன்பெனட் உட்பட பலர் உரையாற்றினர். இதன் போது அதனால் பிரகடனமும் முன்வைக்கப்பட்டது.