தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் தலவாக்கலையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;
பெண்களுக்கு ஆறுமணித்தியால வேலை வழங்க வேண்டும். பெருந்தோட்டத்துறை பெண்களுக்கு ஆறு மணித்தியால வேலை நிர்ணயிக்கப்பட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கம் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றது. தங்களின் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகவும் குடும்ப சுமைகளிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்காகவும் இந்தக் கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமானது கூட்டொப்பந்தமொன்றின் மூலம் நிர்ணயிக்கப்படாமல் சம்பள நிர்ணய சபை மூலமாக தீர்மானிக்கப்பட வேண்டும். வாழ்க்கைச் செலவுக்கேற்ப தோட்டத் தொழிலாளர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்க வேண்டும். அமரர் வி.கே. வெள்ளையன் ஆரம்ப காலத்திலிருந்தே தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
மலையக இளைஞர்கள் அவசரகால சட்டத்தின் கீழ் எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்படுவதை தவிர்த்துக் கொள்ள அவசர காலசட்டம் நீக்கப்படவேண்டும்.
இந்தச் சட்டத்தை நீக்குவதன் மூலம் சிறுபான்மையின மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்.
அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் மலையக இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் நன்மைகளை, உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரு தொழிற்சங்க சம்மேளனத்தை ஸ்தாபிக்க முன்வர வேண்டும். அந்தச் சம்மேளனத்தின் மூலமாக குரல் கொடுக்கும் பொழுது பாகுபாடின்றி தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே முகமாக தீர்த்து வைக்க வழி கிடைக்கும் போன்ற பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.