பொருட்களின் விலையுயர்வினால் அவதியுறும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான எஸ். ராமநாதன் தெரிவித்துள்ளார்.
மாத்தளை நகர மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.
1970 முதல் 1977 வரையிலான அமரர் ஷ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் போது நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறை, விலையேற்றம் ஆகியவற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். இருப்பினும் அப்போதைய அமைச்சரவையில் அங்கம் வகித்த இடது சாரி தலைவர்களான கலாநிதி என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா ஆகியோர் தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுகொடுத்தனர் அவ்வாறு தற்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டு நிறுவனமான பிறிமா நிறுவனம் கோதுமை மா கொள்வனவையும் விற்பனையையும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்டு தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது.
அமைச்சர் பந்துல குணவர்தனவோ தன்னால் இதனை கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகிறார்.
அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை யேற்றத்தைக் கட்டுப்படுத்த நுகர்வோர் அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் தனது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்ய முன்வர வேண்டும்.
இன்று அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் வேதனம் போதாமல் உள்ளது.
பொருட்களின் விலை குறைக்கப்படுமானால் தமக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு மக்கள் திருப்திகரமாக வாழமுடியும்.
முன்னைய காலத்தில் தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும் பெற்றுக் கொடுத்த உரிமைகளைப் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும் சட்டரீதியாக பெற்றுக் கொடுக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக் கொடுக்கவுமே தொழிற்சங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால் இன்று தொழிலாளர் வர்க்கத்தின் மீது சவாரிசென்று மாகாண சபைகளிலும் பாராளுமன்றத்திலும் பதவிகளை பெற்று சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் நோக்குடனே ஒரு சிலர் தொழிற் சங்கங்களை ஆரம்பிக்கின்றனர்.
குறிப்பாக தலைநகரில் போதை வஸ்து விற்பனை செய்து வரும் ஒரு சில மலையக வர்த்தகர்கள் மூடிக் கிடக்கும் ஒரு சில தொழிற்சங்க காரியாலயங்களையும் தொழிற்சங்கங்களையும் விலைகொடுத்து வாங்குவதும் இதுவே மூலகாரணமாகும்.
ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமனம் பெற்றுக் கொண்டுள்ள மலையக அரசியல் வாதிகளும் அமைச்சரவையில் அங்கம் வகித்துவரும் மலையக அரசியல் தொழிற்சங்க பிரமுகர்களும் தொடர்ந்தும் தமது கட்சியினது நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படாது தொழிலாளர்களினது நலனிலும் ஓரளவேனும் கவனம் செலுத்த வேண்டும்.
உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால் தொழிலாளர்கள் படும் வேதனைகளை ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் எடுத்தியம்பி உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கவும் முன்வரவேண்டும்.
இதேசமயம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழிலாளர்கள் உட்பட குறைவான வேதனம் பெறும் அனைத்துத் தரப்பினருக்கும் நியாயமான வேதனம் கிட்டும் வகையில் அரசாங்கம் தேசிய சம்பளத்திட்டம் ஒன்றை வகுத்து அதனை செயற்ப்படுத்த முன்வரவேண்டும். கூட்டு ஒப்பந்தம் இதற்கு எந்த வகையிலும் தடையாக இருக்கமாட்டாது என்றார்.