வவுனியா, மன்னார் மாவட்டங்களின் விலை மதிப்பீட்டு திணைக்களங்களை அநுராதபுரம் மாவட்டத்தின் திணைக்களத்துடன் இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதை ஐக்கிய தேசியக்கட்சியின் வவுனியா அமைப்பாளர் மகேஸ் தவச்செல்வம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரியாவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
ஜுன் மாதம் முதல் அநுராதபுரம் திணைக்களத்தின் கீழ் இவை இயங்கவுள்ளன. இதனை இரத்துச் செய்யுமாறு அவர் அமைச்சரிடம் மகஜர் மூலம் கோரியுள்ளார்.
இதுவரை காலமும் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகமே வவுனியா மன்னார் மாவட்டங்களின் பணிகளைச் செய்துவந்தன.
போக்குவரவு பிரச்சினையால் யாழ்ப்பாணத்தில் இருந்து விலைமதிப்பீட்டு அதிகாரிகள் வவுனியா, மன்னார் பகுதிகளுக்கு வந்து போவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இந்த மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் விலை மதிப்பீட்டு பணிகள் தேங்கியுள்ளன.
இதேவேளை வவுனியா நகரசபை எல்லைக்குள் சுமார் பத்து வருட இடைவெளிக்குப் பின்னர் வீடுகள், கட்டடங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
யாழ். விலைமதிப்பீட்டு அலுவலகத்தில் இருந்து இரு பணியாளர்கள் வவுனியா வந்து இந்த வேலைகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்சமயம் 70 சதவீதமான மதிப்பீட்டு வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே வவுனியா, மன்னார் விலைமதிப்பீட்டு வேலைகளை யாழ்ப்பாண அலுவலக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் மகேஸ் தவச்செல்வம் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.