*நினைவு தின வைபவத்தில் கிஷோர் எம்.பி
தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்காது போனால் எதிர்கால இளைஞர் சமுதாயம் அதனைப் பெற்றுக் கொள்ள போராட்டத்தை நடத்தும் நிலைக்குத் தள்ளப்படும் என்று இறுதிக்காலம் தீர்க்க தரிசனமாகக் கூறியவர் தந்தை செல்வநாயகம்.
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு தின வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் தந்தை செல்வா அறங்காவல் குழுத்தலைவர் டேவிற் நாகநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் மேலும் கூறியதாவது;
தந்தை செல்வாவிற்கு தெற்கில் தனிப்பட்ட மரியாதை இருந்தது. பாராளுமன்றத்தில் அவரின் உரையை சிங்களத் தலைவர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானிப்பார்கள். அந்தளவுக்கு அவரை மதித்தனர். ஆனால், இன்று அந்த நிலைமை அங்கே இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
தமிழ் மக்களுடைய உரிமைகளை அகிம்சை ரீதியாக பலாத்காரமின்றி சகல மக்களின் சம்மதத்துடன் பெறவேண்டும் என்ற சிந்தனையுடன் செயற்பட்டவர் தந்தை செல்வநாயகம் என்றார்.
தந்தை செல்வா அறங்காவல் குழுத் தலைவர் டேவிற் நாகநாதன் தமது தலைமை உரையில் கூறியதாவது;
தமிழ் பேசும் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் அயராது உழைத்தார். அதற்காக மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்காவுடன் ஒப்பந்தமும் செய்தார். பின்னர் பிரதமர் டட்லி சேனநாயக்காவுடனும் ஒப்பந்தம் செய்தார்.
ஆனால், அந்த ஒப்பந்தங்கள் பேரினவாதிகளுடைய எதிர்ப்பினால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களால் மிகவும் வேதனைப்பட்டார்.
வன்முறையையும் இரத்த ஆறு ஓடுவதையும் அனுமதிக்க முடியாது என்ற சிந்தனையில் சமஷ்டி முறையே இறுதித்தீர்வு என்றும் அதுவே அழிவுகளை நிறுத்த ஒரே வழி என்றும் கூறியிருந்தார் என்றார்.
இரா சுப்பிரமணியம் உட்பட பலர் உரையாற்றினார்கள்.
முன்னதாக மணிக்கூட்டுச் சந்தியில் உள்ள தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.