* அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்றே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த மேலும் கூறியதாவது;
"கிழக்கு மாகாணத் தேர்தல் களத்தில் இலக்கத் தகடற்ற வாகனங்களை ஆளும்தரப்பினர் பயன்படுத்துவது குறித்து இதுவரை நாம் அறிந்திருக்கவில்லை . இச்சம்பவங்கள் உண்மையாகவிருந்தால் அதுபற்றி பொலிஸார் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.தே.க.தனது செல்வாக்கை இழந்துள்ளது. எனவே, அவர்களினால் அங்கு வெற்றிபெற முடியாத சூழ்நிலையில் போலியான பிரசாரங்களை அரசாங்கத்திற்கெதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கொண்டு ஐ.தே.க. செயலாளர் தான் விரும்பியவாறு கிழக்குத் தேர்தல் குறித்து கூறுவதில் அர்த்தமில்லை. அவர் கிழக்கு வந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். மட்டக்களப்பில் ஐ.தே.க. பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதென நாம் ஒருபோதுமே கூறவில்லை.
மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்த தினத்தன்றே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இதேவேளை, இலவசப் பாடநூல் விநியோகம் தாமதமடைவதற்கு கல்வியமைச்சு பொறுப்பல்ல. வலயக் கல்வி அலுவலகங்களே இதற்குக் காரணமாகு"மென்றார்.