யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 185 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டிய விழா நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இவ்விழாவையொட்டி கல்லூரியின் 185 வருட சாதனைகளை வளர்க்கும் வரலாற்று ஆவண கண்காட்சியையும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான தகவல் தொழில்நுட்பக் கண்காட்சியையும் யாழ்ப்பாண கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் ஆரம்பித்து வைத்தார்.
இக்கண்காட்சியில் 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகாத்மாகாந்தி யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் மாணவர் காங்கிரஸ் வரவேற்புக் கூட்டத்தில் ஆற்றிய உரைத்தொகுப்பு, அந்நாளில் நிறுவப்பட்ட நினைவுக்கல் பார்வையாளரை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது. இக்கண்காட்சியை யாழ்.மாவட்ட பாடசாலை மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் பார்வையிட்டு வருகின்றனர்.
இன்று சனிக்கிழமை காலை சென்ஜோன்ஸ் தேவாலயத்தில் கல்லூரிக்கு ஆசிவேண்டி வழிபாடுகள், அமரரான அதிபர்களுக்கு மலரஞ்சலி நிகழ்வு, மாணவ தலைவர்கள் ஒன்று கூடல், விளையாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.