* மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டு
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சார்பாகச் செயற்படுமாறு அக்குழு உறுப்பினர்களால் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அவமானங்களுக்குள்ளாக்கப்படுவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மாவை சேனாதிராஜாவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலின் போது த.ம.வி.பு. அமைப்பினரிற்கு ஆதரவாகச் செயற்படுமாறு எமது கட்சியின் அங்கத்தவர்களுக்கு த.ம.வி.பு.அமைப்பினரால் மரண அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் விடுக்கப்படுவதுடன் அவர்களது வாகனங்களும் கடத்தப்படும் அதே நேரம் அவர்கள் உளரீதியான அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் எழுத்து மூலமும் தொலைபேசி மூலமும் கடந்த முப்பதாம் திகதி முறையிட்டதுடன் இத்தொந்தரவுகள், அச்சுறுத்தல்களிலிருந்து இலங்கை தமிழரசுக் கட்சியினரையும் ஆதரவாளர்களையும் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்குத் தேர்தலில் ஈடுபடும் ஆயுதக்குழுக்கள் பீதியானதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக எமது கட்சியின் அங்கத்தவர்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறி வேறு இடங்களில் இடம் பெயர்ந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இத்தேர்தலில் ஜனநாயகத்துக்கு எதிரான குழுக்கள் அரசாங்கத்தால் புகுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலை கிழக்கு மாகாணத் தேர்தல் சுதந்திரமானதாகவும் வெளிப்படையானதாகவும் நடைபெறாதென்பதையே வெளிக்காட்டுகின்றது.
இவ்வாறான நிலையில் கிழக்கில் நடத்தப்படும் தேர்தல் மூலம் பெறப்படும் வெற்றியின் மூலம் கிழக்கிலுள்ள மக்கள் தமக்கு ஆதரவாகவே உள்ளனரென்பதை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தவறான முறையில் வெளிக்காட்டவே முயற்சிக்கின்றனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.