இலங்கையின் அதியுயர் சேவை விருதான விஷித்த சேவா விபூஷணய விருதை முப்படைத்தளபதிகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை வழங்கி கௌரவித்துள்ளார்.
நேற்றுமாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே 2008 ஆம் ஆண்டிற்கான இவ்விருது ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
முப்படைகளிலும் நீண்டகாலமாகச் சிறந்த சேவைபுரிந்த சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, விமானப்படைத்தளபதி ஏயார் மார்ஷல் ரொஷான் குணதிலக, கடற்படைத்தளபதி வைஷ் அட்மிரல் வசந்த கரணகொட மற்றும் 34 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதியிடமிருந்து இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
மறைந்த மேஜர் ஜெனரல் கே.என்.ஜெயக்கொடி மற்றும் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க ஆகியோருக்கும் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நேற்றைய இந்த விருது வழங்கலில் 11 இராணுவ அதிகாரிகளும் 17 கடற்படை அதிகாரிகளும் 7 விமானப்படை அதிகாரிகளும் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றனர்.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.