யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் சட்டத்தரணிகளுக்கு இதுவரையும் அறைகள் ஒதுக்கப்படாததைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை முதல் சட்டத்தரணிகள் நீதிமன்ற அமர்வுகளைப் பகிஷ்கரிப்பதென அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த பகிஷ்கரிப்புப் போராட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டிடம் நிர்மாணிப்பதற்குரிய வரைபடத்திலும் சட்டத்தரணிகளுக்கு ஒதுக்கப்பட்ட அறைகள் வரையப்பட்டிருந்தன. இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு பாவனைக்கும் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் சட்டத்தரணிகளுக்கு எந்த அறையும் வழங்கப்படவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இது தொடர்பாக நாம் போராட்டம் நடத்த முயன்றோம். ஆனால், அதனை நடத்தமுடியாதவாறு நாம் தடுக்கப்பட்டோம்.
ஆனால், இதுவரையும் சட்டத்தரணிகளுக்கான அறைகள் எதுவுமே வழங்கப்படவில்லை. நீதிமன்ற கட்டிடத்தில் சட்டத்தரணிகள் உடை மாற்றுவதற்கோ, தேநீர் கொண்டுவந்து அருந்துவதற்கோ கூட ஒரு அறை இல்லை. நீதிமன்ற நூலகத்தைப் பயன்படுத்தவும் சட்டத்தரணிகளுக்கு அனுமதியில்லை. இவ்வாறான காரணங்களால்தான் நாம் இந்த நீதிமன்ற பகிஷ்கரிப்பை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு தொடர்பான அறிவித்தல் வெளியானதுமே சட்டத்தரணிகளுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை பத்திரிகைகளில் பார்த்தோம். ஆரம்பம் முதல் சட்டத்தரணிகளின் நலன்களுக்கு எதிராக செயற்பட்ட சில சட்டத்தரணிகளிடமே இந்த அறைகள் கையளிக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம்.
மேற்படி அறைகளைப் பொறுப்பேற்ற சட்டத்தரணிகளிடமிருந்து அந்த அறைகளை மீட்கவேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. ஏனெனில், அந்தச் சட்டத்தரணிகள் குடாநாட்டு சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கத்தவர்களாக இல்லை.எமக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அறைகளை இன்று சனிக்கிழமை நீதிமன்ற கட்டிடத்தில் பார்வையிடுவோம். அதில் எமக்குத் திருப்தியேற்படுமேயானால் எமது போராட்டத்தை நிறுத்துவோம்.
அதுவரையும் எமது பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடரும். எனவே, எமது கட்சிக்காரர்கள் அனைவருமே தமது வழக்குத் தவணைகளுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இதேவேளை, சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றக் கட்டிடத்தில் அறைகள் சட்டத்தரணிகளுக்குக் கையளிக்கப்பட்டதாகக் குடாநாட்டு பத்திரிகைகளில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவை தங்களால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சட்டத்தரணிகளுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டது தொடர்பாக நீதிபதிகள் எவருமே எமக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.