இலங்கையில் பணவீக்கம் கட்டுப்பாட்டின்றி அதிகரித்து செல்வதுடன் பொருளாதார ரீதியிலான ஏனைய அடிப்படை விடயங்களும் மோசமான நிலைமைக்கு சென்று கொண்டிருக்கும் அதேசமயம் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையில் வைப்பதற்கான காலத்தையும் அரசாங்கம் நழுவ விட்டிருப்பதாக இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தின் அரைவாசிப் பகுதி நிறைவடைந்திருப்பதுடன் பாராளுமன்றத் தேர்தலுக்கு இரு வருடங்களே இன்னும் இலங்கையில் இருக்கையில் பொருளாதார ரீதியான ஒழுங்கு முறையை ஏற்படுத்துவதற்கான காலம் கடந்து விட்டதாக புதிய பொருளாதார ஆய்வு தெரிவிப்பதாக லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைந்திருக்கும் தருணத்தில் முக்கிய பொருளாதார விடயங்களில் ஏற்பட்டிருக்கும் தளம்பல் நிலையானது `பொருளாதாரத்துக்கு கடும் சோதனையான விடயமென' பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவன ஆய்வாளர் முத்துகிருஷ்ணா சர்வானந்தன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டும் இனிவரும் வருடங்களும் கடுமையான சவாலாக அமையுமென இலங்கையில் சமாதானம் மற்றும் மோதல்கள் தொடர்பான பொருளாதாரம் என்ற தமது ஆய்வறிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக் காட்டியுள்ளார்.
பணவீக்கம் நீண்ட காலத்துக்கு 20 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் அதீத எதிர்பார்ப்புகளுடனான நடவடிக்கையை முன்னெடுக்க முடியாதென அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் பணவீக்கம் ஏப்ரலில் புதிய சுட்டெண்ணின் பிரகாரம் 25 சதவீமாக அதிகரித்துள்ளது. பழைய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரகாரம் 29.9 சதவீதமாகும்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்பட்டிருக்கும் மக்களின் விசனத்தை இராணுவ வெற்றி மூலம் தணிக்க முடியுமென்ற எதிர்பார்ப்பில் அரசாங்கம் உள்ளது.
ஆனால், யுத்தத்தில் வெற்றி கொள்வதால் தேர்தலில் சுலபமாக வெற்றியை பெற்றுக் கொடுக்குமென கூறமுடியாதென்கிறார் சர்வானந்தன்.
ஜனாதிபதி ராஜபக்ஷ பொருளாதார தேசியவாதத்திற்கும் மேலாக பொருளாதார சர்வதேசமயமாதலை அரவணைத்துக் கொள்ள வேண்டும். எஞ்சியிருக்கும் தனது பதவிக் காலத்தில் பொருளாதாரத்தை வினைத்திறனுடன் செம்மைப்படுத்த வேண்டியுள்ளது அல்லது பாராளுமன்ற ஜனாதிபதி தேர்தல்களில் பின்னடைவு ஏற்படும் என்றும் சர்வானந்தன் கூறியுள்ளார்.