* புலிகளுடையதாகவிருக்கலாமென சந்தேகம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்ற கடலோரப் பகுதியில் 2 மர்ம இழுவைக் கப்பல்கள் கரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், மேலும் ஒரு இழுவைக் கப்பல் நடுக்கடலில் மூழ்கிய நிலையில் இருப்பதால் மீனவர்கள் மத்தியில் பீதியும் எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடற்கரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் பச்சைக்காடு என்ற இடம் உள்ளது. இது வெட்டாறு கடலோடு கலக்கும் முகத்துவாரமாகும்.
மேலும் தோகை வாய்க்கால் என்ற சிற்றாறும் கடலில் கலக்கும் பகுதியாகும். இதனால் இங்கு அலையாத்தி காடுகள் என்று சொல்லப்படும் மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன. மீனவர்கள் இங்கு கடலுக்குச் செல்லமுடியாது. ஏனெனில் இங்கு ஆழம் குறைவாகவும் சேறு மண்டியும் காணப்படும்.
முத்துப்பேட்டை பகுதியே மீனவர்களின் முக்கிய மீன்பிடிப்புப் பகுதியாகவும், சிறிய துறைமுகப் பகுதியாகவும் இருந்துவருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பச்சைக்காடுப் பகுதியில் முகத்துவாரம் அருகே 2 மர்மக் கப்பல்கள் கரை ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து கடலோரக் காவல்படையினரும் திருவாரூர் மற்றும் முத்துப்பேட்டைப் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர்.
அங்கு ஒதுங்கியிருந்த 2 கப்பல்களை பொலிஸார் கைப்பற்றினர். அந்தக் கப்பல்கள் பெரிய கப்பல்களுக்கு பின்புறம் சரக்குகளை ஏற்றியடி இயந்திரம் இல்லாமல் செல்லும் இழுவைப் படகுகளாகும். அவற்றில் 5 தொன் வரை சரக்குகளை ஏற்ற முடியும். கைப்பற்றப்பட்ட கப்பல்கள் 150 மீற்றர் நீளமும் 13 மீற்றர் அகலமும் 5 மீற்றர் உயரமும் கொண்டவையாக இருந்தன. ஆனால் இந்த இழுவைக் கப்பல்களில் எவ்வித சரக்குகளும் காணப்படவில்லை.
ஒரு கப்பலில் எஸ்.எச்.பி 1005 என்றும் மற்றொரு கப்பலில் எஸ்.எச்.பி 710 என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. எனவே இவை இரண்டும் ஒரே குழுவைச் சேர்ந்த 2 கப்பல்களாக இருக்கும் என்று தெரிகிறது.
இதுபற்றி பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது; புலிகளுக்கு ஆயுதங்களையும் பிற தளபாடங்களையும் கடத்தி செல்ல இந்தக் கப்பல்கள் பயன்பட்டிருக்கலாம் என்றும், சமீபத்தில் வீசிய நர்கீஸ் புயலால் இவை கடலில் மிதந்து வந்து முத்துப்பேட்டையில் கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதேபோன்று, மூன்றாவது கப்பல் ஒன்று முத்துப்பேட்டை அருகே நடுக்கடலில் கவிழ்ந்த நிலையில் மிதந்து கொண்டிருந்ததாகவும் மீனவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அந்தக் கப்பலையும் கைப்பற்றி விசாரணை நடத்த பொலிஸார் முடிவெடுத்துள்ளனர்.