வடக்கே மணலாறு, மன்னார் மற்றும் வவுனியாவில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் ஐந்து படையினர் கொல்லப்பட்டும் 15 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துமுள்ளதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மணலாறில் ஜனகபுர மற்றும் கிரிப்பன்வெவ பகுதியில் வியாழக்கிழமை மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
இந்த மோதல்களில் நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன், எட்டுப் படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னாரில் கறுப்புக்குளம், நெடுங்கண்டல், வேப்பங்குளம் பகுதியில் வியாழக்கிழமை நான்கிற்கும் மேற்பட்ட தடவைகள் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேநேரம் வவுனியாவில் நாவற்குளம், வேலங்குளம், பாலம்பிட்டி, சின்னையன் குளம் பகுதியில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் இரு படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.