* நீதி, சுதந்திர தேர்தலுக்கான மக்கள் இயக்கம் குற்றச்சாட்டு
கிழக்கு மாகாண தேர்தல் பிரசார களத்தில் இலக்கத் தகடற்ற வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக நீதியானதும் , சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இலக்கத்தகடற்ற வாகனங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது குறித்து பொது மக்களிடமிருந்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அத்துடன் இலக்கத் தகடற்ற வாகனங்கள் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்படுவதை தமது கண்காணிப்பாளர்கள் நேரடியாக அவதானித்ததாகவும் மக்கள் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இலக்கத் தகடற்ற வாகனங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படுவது நீதியான, சுதந்திரமான தேர்தல் குறித்த அபிப்பிராயங்களை குறைவடையச் செய்யுமெனவும் இயக்கத்தின் பேச்சாளரான கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கு அப்பால் பொலிஸாரின் ஒருபக்கச் செயற்பாடு மற்றும் அரச சொத்துகளின் துஷ் பிரயோகம் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.