Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
டக்ளஸ் தலைமையில் வட மாகாண நிர்வாகத்திற்கு விசேட செயலணிக்குழு
[03 - May - 2008] [Font Size - A - A - A]
* ரிசாத், பசில் உறுப்பினர்கள்; அமைச்சரவை அங்கீகாரம்

எம்.ஏ.எம்.நிலாம்

வடமாகாண நிர்வாகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசேட செயலணிக் குழுவொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்திருக்கிறார்.

இக்குழுவில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியின் இளைய சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி.யும் இடம்பெறுகின்றனர்.

வடமாகாணத்தின் பாதுகாப்பு, அபிவிருத்தி, மீள் குடியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதற்காகவே இந்த விசேட செயலணிக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக நேற்று வெள்ளிக் கிழமை தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

வடக்கு நிர்வாகத்தை மேற்பார்வை செய்ய ஆலோசனைச்சபையொன்றை அமைக்குமாறு சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதிகள் குழு முன்னர் யோசனை தெரிவித்திருந்தது. ஆயினும், அதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது விசேட செயலணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கள கடும் போக்காளரின் எதிர்ப்பை சமாளிக்கும் நோக்கத்துடனேயே இடைக்கால நிர்வாக சபை என்ற சொற்பதத்தை தவிர்த்து விசேட செயலணிக் குழுவென்ற பெயரில் நியமித்திருப்பதாக அறியவருகிறது.

இதேவேளை, அமைச்சரவைக்கு ஜனாதிபதி சமர்ப்பித்த இதுதொடர்பான பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடூர நடவடிக்கைகள், வன்முறைகள் காரணமாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொருளாதார, சமூக கலாசாரத் துறைகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

முக்கியமாக குடும்பங்கள் இடம்பெயர்தல், சுகாதார, பாடசாலை கல்வி சீர்குலைந்து போதல், கடற்றொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் மிகமோசமான பின்னடைவையே காண்கின்றோம்.

இந்த மாவட்டங்களின் மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக சுகாதார சேவை, குடிநீர், விவசாயத்துக்கான நீர், மின்சாரம், தொலைத்தொடர்பு, நெடுஞ்சாலைகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்புகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்யும் பொருட்டும் பாடசாலைக் கல்வியை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியை பெற்றுக் கொடுத்து வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும் விவசாய, கால்நடை வளர்ப்பு, கடற்றொழில் அபிவிருத்தி போன்ற மகிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளை இந்த மாவட்டங்களில் நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.

வடக்கு மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதோடு வெகு விரைவில் அதனை முடிவுக்குக் கொண்டு வந்து வட மாகாண சபையை அமைக்கும் வரையில் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒத்துழைத்துச் செயற்படவும் ஆலோசனைகளை வழங்கவும் விசேட செயலணிக் குழுவை நியமிக்க அரசு எண்ணுகிறது.

அந்தக் குழுவுக்கு பொறுப்புக் காட்டப்படும் விடயங்கள் வருமாறு;

அரசின் அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நிறைவேற்றுச் சபையினூடாக வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் ஆலோசனைகள், வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுத்தல்.

மக்களை மீளக்குடியமர்த்துதல், புனர்வாழ்வளித்தல் நடவடிக்கைகளை ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு பொருத்தமான வழிகாட்டல்களை வழங்குதல்.

நிறைவேற்றதிகாரம் மற்றும் சர்வகட்சிப் பிரதிநிதிகளின் குழுவின் மூலம் சிபாரிசு செய்யப்பட்ட ஆலோசனைக் குழு என்பவற்றுக்கிடையில் அவசியமான தொடர்புகளை உருவாக்குதல்.

அவசியமான சந்தர்ப்பங்களில் வடமாகாண ஆளுநருக்கு யோசனைகள், கருத்துகளை முன்வைத்தல்.

இவ்விடயம் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்;

தமிழ் மக்களின் பிரச்சினையும், புலிகளின் பிரச்சினையும் வேறுபட்டதாகும். வடக்கில் தற்போது தேர்தலை நடத்த முடியாது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ நியமன முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு வடக்கு அபிவிருத்தியை மாத்திரமல்லாது மக்களின் நாளாந்த பிரச்சினைகளையும் கவனத்திற்கொள்ளும். இச்சபை தற்போதே பிரசவமாகியுள்ளது. இனித்தான் இதை வளர்த்தெடுக்க வேண்டும்.

இக்குழுவுக்கு வடபகுதி மக்களுக்கான சிறப்பு நிர்வாகக் குழுவென பெயரிடவுள்ளேன். இக்குழு மீள்குடியேற்றம், புனர்வாழ்வில் குழு கூடிய அக்கறை செலுத்தும் முழு அதிகாரத்துடன் செயற்படும் இக்குழு அவசியமானால் வட மாகாண ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும் என்றார்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com