அரச சார்பற்ற நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனம் ஒன்றில் தன்னியக்கக் கைத்துப்பாக்கியுடன் பயணம் செய்த பிரபாகரன் எனப்படும் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவரும் குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிபவரே எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப கடந்த 30 ஆம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள பொலிஸாரின் வீதித் தடை நிலையத்தில் வைத்து மேற்படி அரசசார்பற்ற நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனம் சோதனையிடப்பட்ட சந்தர்ப்பத்தில் பயணம் செய்து கொண்டிருந்தவரும் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவருமான பாக்கியராஜ் பிரபாகரன் என்னும் பெயருடைய நபரை பொலிஸார் சோதனையிட்ட போது அவரிடம் கைத்துப்பாக்கி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கைத்துப்பாக்கி மைக்ரோ கைத்துப்பாக்கி வகையைச் சேர்ந்த தன்னியக்க கைத்துப்பாக்கி எனப் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மைக்ரோ பிஸ்ரலை அவர் வைத்திருந்ததைத் தொடர்ந்து அதனை பொலிஸார் கைப்பற்றியதுடன் நிறுவனப் பணிப்பாளராகிய குறித்த பாக்கியராஜ் பிரபாகரன் என்னும் நபரையும் கைது செய்துள்ளனர். இந்தத் தகவலை வவுனியா பிரதேசத்தின் பொலிஸ் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட சோதனை மற்றும் விசாரணைகளிலிருந்து அவர் மட்டக்களப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதும் அவர் குறித்த மைக்ரோ தன்னியக்க கைத்துப்பாக்கியை வவுனியாவிலுள்ள நபர் ஒருவருக்குக் கொடுபதற்காக இவ்வாறு அரச சார்பற்ற நிறுவன வாகனத்தில் எடுத்துச் சென்றார் என்பதும் தெரிய வந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
லங்காதீப 01.05.2008