மார்ஷின் அதிரடி அரைச்சதம் கைகொடுக்க, யுவராஜின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, லட்சுமண் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது.
ஐ.பி.எல்.`ருவென்ரி-20' போட்டியில் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற யுவராஜ் களத் தடுப்பை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக லட்சுமண், கில்கிறிஸ்ட் களமிறங்கினர். இர்பான் பதான் கில்கிறிஸ்டை (6) போல்டாக்கினார். அடுத்து வந்த கிப்ஸ் (7) பியுஸ் சாவ்லா சுழலில் சிக்கினார். இதற்குப் பின் லட்சுமண் நிதானமாக விளையாட, ஓட்ட எண்ணிக்கை மெதுவாக நகர்ந்தது. இவர் சாவ்லா பந்தில் 48 ஓட்டங்களுக்கு (8 பவுண்டரி) நடையைக் கட்டினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிடி மீண்டும் ஏமாற்றினார். இவர் 13 ஓட்டங்களுக்கு வெளியேறினார். இந்த நேரத்தில் வேணு கோபால் (1), பங்கர் (3) வந்த வேகத்தில் அரங்கு திரும்ப, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ஓட்டங்கள் எடுத்து தவித்தது.
இதற்குப் பின் தனிநபராகப் போராடிய ரோகித் சர்மா அணியை மீட்டார். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் உறுதிமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாவ்லா வீசிய 15 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். ககன்திப் சிங் வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். ஷ்ரீசாந்த் வீசிய 17 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார்.
பின்னர் ககன்திப் சிங்கின் 19 ஆவது ஓவரில் `ஹட்ரிக்' பவுண்டரி விளாசினார். பதான் வீசிய கடைசி ஓவரில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்தார். இவரது அதிரடி கைகொடுக்க, டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகள்ண இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. 42 பந்துகளில் 76 ஓட்டங்கள் (10 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசிய ரோகித் சர்மா ஆட்டமிழக்காமலிருந்தார்.
சுலபமான இலக்கை விரட்டிய யுவராஜ் அணிக்கு மார்ஷ் அதிரடித் தொடக்கம் கொடுத்தார். பவுண்டரிகளாக விளாசி அசத்தினார். பங்கர் `த்ரோவில்' சர்வான் (15) அவுட்டானார். சங்கக்கார (3) விரைவாக வெளியேறினார். கப்டன் யுவராஜும் (14) அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை.
ஆனாலும் மஹேல ஜெயவர்தன `கம்பெனி' கொடுக்க தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த மார்ஷ் வெற்றியை உறுதி செய்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 167 ஓட்டங்கள் எடுத்து சுலபமாக வெற்றி பெற்றது. மார்ஷ் 84 (11 பவுண்டரி, 1சிக்ஸ்), ஜெயவர்தன 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கமாலிருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மார்ஷ் பெற்றார்.