உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் செல்லும் முயற்சியில் சீனக் குழுவினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திபெத்தியர்கள் இடையூறு செய்யக் கூடும் என்பதால் பயண ஏற்பாடுகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
சீனத் தலைநகர் பீஜிங்கில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளது. இதற்கான 100 நாட்கள் கவுன்ட் டவுண் விழா கோலாகலமாக நடந்தது. பீஜிங் ஒலிம்பிக் ஜோதி உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. சீனாவின் பிடியிலிருந்து விடுதலை கோரும் திபெத்தியர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். லண்டன், பிரான்சில் ஜோதியைப் பறித்து அணைக்க முயற்சித்தனர்.
இந்த சர்ச்சைகளைக் கடந்து உலகின் மிக உயரமான (8,848 மீற்றர்) எவரெஸ்ட் சிகரத்துக்கு பீஜிங் ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் செல்ல சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரகசியமாக செய்து வருகிறது. ஜோதி செல்லும் பாதை, பயண நேரம் போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சீனாவில் எவரெஸ்ட் சிகரம் `குமோலங்காமா' என்று அழைக்கப்படுகிறது. 31 பேர் கொண்ட ஒலிம்பிக் குழுவினர் 6,500 மீற்றர் உயரம் வரை ஜோதியை எடுத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாலும், கடும் குளிர் நிலவுவதாலும் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் பயணம் தொடரும் என குழுவினர் அறிவித்துள்ளனர். சீன `ரி.வி' பெரும் தொகை செலவு செய்து கடின பயணத்தின் பிரத்தியேக காட்சிகளை அவ்வப்போது ஒளிபரப்பி வருகிறது.
இமய மலைப் பகுதிகளில் ஒட்சிசனின் அளவு குறைவாக இருக்கும். காற்று மற்றும் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒலிம்பிக் ஜோதி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் சுற்றிய ஜோதியிலிருந்து வேறுபட்டது. திபெத்தியர்கள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால், எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றிய பகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து எவரெஸ்ட் பயணக் குழுவின் முகாமையாளர் சன் பென் கூறியதாவது. எவரெஸ்ட் மலையில் ஏறுவது சாதாரண விஷயமல்ல. மரண பயணமாக இருக்கும். கடந்த ஆண்டு நான் 7, 500 மீற்றர் உயரத்தில் இருந்த போது பலத்த காற்று வீசியது. அதற்குப் பிறகு என்னால் ஒரு அடி கூட நகர முடியவில்லை. 8, 000 மீற்றருக்குப் பிறகு பயணத்தை காற்று தான் நிர்ணயிக்கும். வடகிழக்குப் பாதையில் செல்லத் திட்டமிட்டுள்ளோம். ஒலிம்பிக் ஜோதியை எவரெஸ்ட் உச்சிக்கு எடுத்துச் சென்று வரலாறு படைக்கக் காத்திருக்கிறோம். மலை ஏறும் குழுவினர் வெற்றி பெற கடவுளைப் பிரார்த்திக்கிறேனென்றார்.